முதல்முறையாக சிங்கப்பூரை வந்தடைந்த டெஸ்லா கார்கள்
புதிய டெஸ்லா கார்கள் முதல்முறையாக சிங்கப்பூருக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஐந்து மாதங்களுக்கு முன்பு விற்பனைத் தளத்தை அமெரிக்க மின்சார கார் நிறுவனமான டெஸ்லா இங்கு தொடங்கியது.
தோ பாயோ லோரோங் 8ல் உள்ள விற்பனைக்கூடத்தை நேற்று காலை 10 மணி அளவில் புதிய டெஸ்லா கார்கள் வந்தடைந்தன.
விற்பனைக்கூடம் தயாராக இன்னும் இரண்டு மாதங்கள் எடுக்கும் என்றபோதிலும் வாடிக்கையாளர்களுக்காக கார்கள் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டதாக டெஸ்லா நிறுவனத்தின் சிங்கப்பூர் பிரிவு மேலாளர் கிறிஸ்டஃபர் பௌசிகுவேஸ் தெரிவித்தார்.
'எஃப்1 பிட்' கட்டடத்தில்
சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சி
மெரினா பேயில் உள்ள 'எஃப்1 பிட்' கட்டடத்தில் வரும் திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூர் ஆயுதப் படை பயிற்சியில் ஈடுபட இருக்கிறது.
திங்கட்கிழமை நண்பகலிலிருந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பயிற்சி நடத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
"பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்கள் பீதி அடையாமல் இருக்கவும் பயிற்சி நடத்தப்படும் இடத்தைச் சுற்றி தடுப்பு போடப்படும்," என்று தற்காப்பு அமைச்சு கூறியது.
குடியிருப்பாளர்களுக்குக் கட்டாய கொவிட்-19 பரிசோதனை
சுவா சூ காங், லேக்சைட் ஆகிய வட்டாரங்களில் உள்ள இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் வசிப்போருக்குக் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
11 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை அடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு 3 டெக் வாய் அவென்யூ, 357 யுங் ஆன் சாலை ஆகிய இரண்டு புளோக்குகளின் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
பரிசோதனைக்காக வரும் குடியிருப்பாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும் என்றும் நேரத்துடன் வந்துவிட வேண்டும் என்று நினைவூட்டப்படுகின்றனர்.
இதற்கிடையே, அங் மோ கியோ, கிளமெண்டி ஆகிய இரண்டு வட்டாரங்களில் உள்ள இரண்டு புளோக்குகளில் வசிப்போருக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
438 அங் மோ கியோ அவென்யூ 10 மற்றும் கிளமெண்டி அவென்யூ 3ல் உள்ள புளோக் 430, புளோக் 445A குடியிருப்பாளர்களுக்குப் பரிசோதனை நடத்தப்படும்.

