கிருமித்தொற்று உள்ளோர் 4 கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சென்றுள்ளனர்

கிருமித்தொற்று உள்ளோர் 4 கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சென்றுள்ளனர்

2 mins read
090ddbbf-ad06-4532-bd64-1a640e1393d5
-

இங்குள்ள நான்கு கத்தோலிக்க தேவாலயங்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்று கண்டவர்கள் சென்று வந்துள்ளதாக சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கூறியுள்ளது. திருச்சபை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று அதனைத் தெரிவித்தது. அவை ஹோலி ஸ்பிரிட் தேவாலயம், ஹோலி கிராஸ் தேவாலயம், இம்மேக்குலேட் ஹார்ட் ஆஃப் மேரி தேவாலயம், செயிண்ட் ஆன்ஸ் தேவாலயம் ஆகியவை என்று திருச்சபை குறிப்பிட்டது.

தொற்று கண்டவர்கள் கடந்த 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை அங்கு சென்றுள்ளனர். அச்சம்பவங்கள் எல்லாவற்றிலும் தொற்றுள்ளவர்கள் யாரிடமும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் அவர்கள் தேவாலயங்களுக்கு வந்தபோது அங்கு இருந்தவர்களை அடையாளம் காண சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்பு களுடன் பணியாற்றி வருவதாக திருச்சபை கூறியது.

பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் தேவாலயங்கள் வழிபாட்டுக்குப் பாதுகாப்பான இடங் களாக இருப்பதை உறுதிசெய்ய தேவாலயங்களுடன் ஒத்துழைக்கும்படி ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை வழிபாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது. அதன் தொடர்பில் நான்கு தேவாலயங்களும் அவற்றின் ஃபேஸ்புக் பக்கங்களில் தனித்தனியே விவரம் அளித்தன.

செங்காங்கில் உள்ள செயிண்ட் ஆன்ஸ் தேவாலயத்துக்கு தொற்று கண்ட ஒருவர் ஜூலை 25 அன்று பிற்பகல் 1.30 மணி கூட்டுவழி பாட்டில் கலந்துகொண்டார். அவர் தேவாலயத்தில் நண்பகல் முதல் இருந்ததாக நம்பப்படுகிறது. அதே நாளில், ஹாய்லன்ட் ரோடில் உள்ள இம்மேக்குலெட் ஹார்ட் ஆஃப் மேரி தேவாலயத்தில் நடந்த மாலை 5 மணி கூட்டு வழிபாட்டில் தொற்றுள்ளவர் ஒருவர் கலந்துகொண்டார்.

கிளமெண்டி அவென்யூ ஒன்றில் உள்ள ஹோலி கிராஸ் தேவாலயத்துக்கு தொற்றுள்ளவர் ஜூலை 25ஆம் தேதி காலை ஏழரை மணி தொழுகையின்போது வந்தார் என்றும் தாம் முன்னதாக சென்று வந்த சந்தையில் அவருக்குத் தொற்று பரவியிருக்கலாம் என்றும் தேவாலயம் கூறியது.

தொற்று உள்ளவருக்கு ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. அப்பர் தாம்சன் ரோடில் உள்ள ஹோலி ஸ்பிரிட் தேவாலயத்தில் ஜூலை 18ஆம் தேதி 11 மணி கூட்டுவழிபாட்டில் தொற்றுள்ள ஒருவர் கலந்துகொண்டார். அவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு விட்டது.