டோவர் வனத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்படுவதற்கு வரவேற்பு

டோவர் வனத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்படுவதற்கு வரவேற்பு

2 mins read
87663ff7-0612-4f12-a4e9-5889c4b5a515
-

டோவர் வனத்தின் ஒருபாதியில் இப்போதைக்கு வீடுகள் கட்டாமல் அதனை இயற்கைப் பூங்காவாகப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவு இயற்கை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல தற்போதுள்ள சிங்கப்பூரர் களுக்கும் வருங்கால சந்ததி யினருக்கும் வெற்றி என்று இயற்கைப் பாதுகாப்பு நிபுணர்களும் டோவர் குடியிருப்பாளர்களும் கூறியுள்ளனர்.

முக்கிய வீடமைப்புத் தேவைகளை விட்டுக் கொடுக்காமல் துடிப்பான இயற்கை பாதுகாக்கப்பட்ட ஒரு சிங்கப்பூர், மேம்பட்ட சிங்கப்பூர் என்று இயற்கை சங்கத்தின் தலைவர் டாக்டர் ஷோன் லம் கூறினார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தை அவர் ஒரு நல்ல தீர்வு என்று வருணித்தார். கழகத்தின் புதிய திட்டம், இயற்கைப் பகுதியாகவும் மற்ற இயற்கைப் பரப்புகளை இணைக்கும் பாதையாகவும் உள்ள டோவர் வனம் அதன் சுற்றுப்புற செயல்பாடுகளைத் தொடர்வதை உறுதி செய்யும் என்றார் டாக்டர் லம். டோவர் வனம் அழிக்கப்படக்கூடாது என்று இணையத்தில் கையெழுத்து மனுவைத் தொடங்கிய குடியிருப்பாளர் சிட்னி லியோங்கும் திட்டத்தை வரவேற்றார். இவ்வேளையில் டோவர் வனத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள 11 ஹெக்டர் நிலப்பரப்பு வீடுகளைக் கட்டவும் வர்த்தக, பொழுதுபோக்கு வசதிகளை அமைக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த நிலப்பரப்பில் வீடுகளைக் கட்டுவது, முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் வீடுகளுக்கு இருக்கும் வலுவான தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இன்று கூறியது.

அந்த வட்டாரத்தில் கடைசியாக 2012ஆம் ஆண்டில் பிடிஓ வீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது என்றது கழகம். பிள்ளைகள் தங்கள் அருகில் வசிக்க விரும்புவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தன்னிடம் கருத்துரைத்துள்ளதாக கழகம் சொன்னது.