சிங்கப்பூரில் உள்ள எல்லாச் சந்தைகளுக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் செல்பவர்கள் இனி கட்டாயமாக டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவியைப் பயன்படுத்தி நுழைய வேண்டும்.
தேசிய சுற்றுப்புற வாரியம் இதனை நேற்று தெரிவித்தது.
டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவியைப் பயன்படுத்தினால்தான் இந்த இடங்களுக்குள் நுழைய முடியும் என்று சுகாதார அமைச்சு முன்னதாக ஜூலை 20ஆம் தேதி அறிவித்திருந்தது.
அதனை ஒட்டி, இந்த இடங் களுக்குள் சென்றுவருவோரைக் கண்காணிக்க சேஃப்என்ட்ரி முறையை நடப்புக்குக் கொண்டு வருவதற்கு, நகர மன்றங்கள், சந்தைகள், உணவங்காடி நிலையங்களை நடத்தும் நிறுவனங்கள், இதர அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று கூறியது.
நேற்றைய நண்பகல் நிலவரப்படி ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக் குழுமத்தில் 997 தொற்றுச் சம்பவங்கள் உள்ளன.
அண்மைய வாரங்களில் அங்கிருந்து சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் தொற்று பரவியது. அப்பரவல் சுத்தம், சுகாதாரத்தில் உயர்ந்த தரத்தைக் கடைப் பிடிப்பதன் அவசியத்தைக் காட்டுவதாக வாரியம் குறிப்பிட்டது.
திறந்த கட்டடங்களான சந்தைகளும் உணவங்காடி நிலையங்களும் பலர் கட்டுப்பாடு அற்று வந்துபோகும் இடங்கள். அவற்றில் சேஃப்என்ட்ரி முறையை நடப்புக்குக் கொண்டுவருவது சவாலானது என்று வாரியம் கூறியது.
ஆனால் டெல்டா வகைக் கிருமி மிக எளிதில் பரவக் கூடிய தன்மை கொண்டது என்பதால், தொற்றுள்ளவர்கள் யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை விரைந்து அடையாளம் காண அதிகத் தேவை உள்ளதாக வாரியம் சொன்னது.
"சந்தைகள், உணவங்காடி நிலையங்களுக்குள் நுழைய, வாடிக்கையாளர்கள், கடைக்காரர்கள், கடை உதவியாளர்கள் அனைவரும் டிரேஸ்டுகெதர் கருவியை சேஃப்என்ட்ரி இயந்திரத்தில் தட்ட வேண்டும் அல்லது டிரேஸ்டுகெதர் செயலியை வருட வேண்டும், என்றது வாரியம்.
டிரேஸ்டுகெேதர் முறையைப் பயன்படுத்த உதவுவதற்கு, சந்தைகளிலும் உணவங்காடி நிலையங் களிலும் ஊழியர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் அது கூறியது.

