செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7b37f4d3-cbc1-40ac-bf61-e0095d0996f4
-

சிங்கப்பூருக்கான புதிய அமெரிக்க தூதரை முன்மொழிந்தார் அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொழில்முனைவரும் இணையக் கொடையாளருமான திரு ஜானதன் எரிக் கேப்லனை (படம்) சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராக முன்மொழிந்துள்ளார்.

ஐம்பது வயதைத் தாண்டிய திரு கேப்லனின் முன்மொழிவு உறுதியாகவில்லை. அதற்கு முன்னர் அவர் அமெரிக்க செனட்சபையின் விசாரணைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

திரு கேப்லனுக்கு வெளியுறவுக் கொள்கையில் முன் அனுபவம் இல்லை. அவர் பல தொழில்களை வெற்றிகரமாகத் தொடங்கியவர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. தற்போது அவர் 'எடியுக்கேஷன் சூப்பர்ஹாய்வே' எனும் லாபநோக்கமற்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அமெரிக்க அரசாங்கப் பள்ளிவகுப்புகளில் கம்பிவட இணையவசதியை ஏற்படுத்தித் தருவது அந்த அமைப்பின் நோக்கமாகும்.

தாவிக் குதித்து இல்லத் தனிமை உத்தரவை மீறியவர்

தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவின்கீழ் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த ஒரு 39 வயது மாது, அந்த உத்தரவை மீறியதற்காக அவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சிங்கப்பூரரான ஜின் சென்சூ, தமது அறையை இரண்டு முறை வெளியேறியதுடன் ஒருமுறை தமது அறையிலிருந்து வேறு அறையின் பால்கனிக்கு தாவிக் குதித்து தனிமை உத்தரவை மீறினார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி கம்போடியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய அவர், 18ஆம் தேதி வரை தம்மைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். அது பற்றி குடிநுழைவு சுங்கச்சாவடி ஆணைய அதிகாரி அவருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் ஷங்ரிலா ராசா செந்தோசாவில் தங்கியிருந்த அவர், அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றதாகக் கூறப்பட்டது. முதல் முறை அறையை விட்டு வெளியேறியபோது, அவர் தமது அறைக்கு மேல்மாடியில் இருந்த வேறொரு அறையின் பால்கனிக்குத் தாவிக் குதித்து அங்கு ஐந்து நமிடம் இருந்திருக்கிறார். அறைக்கு வெளியே முகக்கவசம் அணியாததன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளையும் மற்றவர்களுக்கு கொவிட்-19 கிருமி தொற்றும் அபாயத்தை உண்டாக்கியதற்காக இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.

தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை: 26 பள்ளிகளில் குலுக்கல்

அடுத்த ஆண்டுக்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கையின் நான்காவது கட்டமான 2பி கட்டத்தில் 26 பிரபல பள்ளிகள் குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்யவுள்ளன. அவற்றில் மூன்று பள்ளிகளில் இடங்களுக்கு ஆக அதிகமான போட்டி நிலவுகிறது.

தாவ் நான் பள்ளியில் 20 இடங்களுக்கு 57 பிள்ளைகள் போட்டியிடுகின்றனர். செயிண்ட் ஹில்டாஸ் தொடக்கப் பள்ளி நான்காம் கட்டத்துக்காக 51 பிள்ளைகளின் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளது. ஆனால் 21 இடங்கள் மட்டுமே பள்ளியில் உள்ளன. அதே போல ஹோலி இன்னசன்ட்ஸ் தொடக்கப் பள்ளியில் 21 இடங்களுக்கு 47 பிள்ளைகள் பதிவு செய்து காத்துள்ளனர்.

சென்ற ஆண்டு 2பி கட்டத்தில் 22 பள்ளிகளில் மட்டும் குலுக்கல் இடம்பெற்றது. இவ்வாண்டு குலுக்கல் முடிவுகள் ஆகஸ்ட் 2ஆம் தேதி தெரியவரும் என்றது கல்வி அமைச்சு.