பீஷானில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடு ஒன்று 1.295 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவே ஆக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள வீவக வீடு.
120 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஐந்தறை வீடு, பீஷான் ஸ்திரீட் 24, 'டிபிஎஸ்எஸ்' திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட புளோக் 273ஏ-யில் அமைந்துள்ளது. கட்டடத்தின் பெயர் 'நேச்சுரா லோஃப்ட்'.
கட்டடத்தில் 40 மாடிகள் உள்ளன. விளம்பரம் செய்து மூன்றே வாரங்களில் வீடு வாங்கப்பட்டதாகப் பரிவர்த்தனையைக் கையாண்ட ஈஆர்ஏ நிறுவனம் தெரிவித்தது.
இதற்கு முன் சென்ற மாதம் 1.268 மில்லியன் வெள்ளிக்கு ஒரு வீவக வீடு விற்கப்பட்டது. அதுவே ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீவக வீடாக இருந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 426 வீவக வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளி அல்லது அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

