உரிமமின்றி கேளிக்கை கூடங்கள் நடத்தியதாகக் குற்றச்சாட்டு
உரிமம் இல்லாமல் கேடிவி கேளிக்கைக் கூடங்களை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மூவரும் 35லிருந்து 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மூவரும் குற்றங்களைப் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 30,000 வெள்ளி அபராதமும் 12 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கேடிவி கேளிக்கை கூடங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று பெரிய அளவில் ஏற்பட்டதால் அவை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மின்னிலக்கமயமாக உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு பரிந்துரைகள்
வயதான உணவங்காடிக் கடைக்காரர்கள் தங்கள் வர்த்தகத்தை மின்னிலக்கமயமாக்க இளம் கடைக்காரர்கள் அல்லது மாணவத் தொண்டூழியர்கள் உதவலாம்.
இணைய வர்த்தக முறைகளைப் பயன்படுத்த உணவங்காடிக் கடைக்காரர்களுக்கு உதவ இத்தகைய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
'ஏஎஃப்ஏ' எனப்படும் சிங்கப்பூரின் 'டுகெதர் அலயன்ஸ் ஃபார் ஆக்ஷன்' திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குழு நடத்திய இரண்டாம் கட்ட கலந்துரையாடலில் அத்தகைய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
உணவங்காடிக் கடைக்காரர்கள் எவ்வாறு இணையம்வழி தங்களின் சேவைகளை வழங்கலாம் என்பது உள்ளிட்ட அம்சங்கள் கலந்துரையாடலில் அலசப்பட்டன.
குழுவில் உணவு விநியோக மற்றும் உணவங்காடித் துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறைக்கான மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர், தொடர்பு, தகவல் துறை, தேசிய வளர்ச்சித் துறை ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
'ஏஎஃப்ஏ' மின்னிலக்கப் பிரதிநிதிகள் 90 விழுக்காட்டு உணவங்காடிக் கடைக்காரர்களுடன் பேசியிருப்பதாகத் திரு டான் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.
அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இணையம்வழி உணவை விற்கும் முறையைப் பின்பற்றியிருப்பதாகவும் இதர கடைக்காரர்களில் சுமார் 14 விழுக்காட்டினர் அவ்வாறு செய்வதில் அக்கறை காட்டி வருவதாகவும் அவர் சொன்னார்.
தற்போதைய சவால்களை எதிர்கொள்ள உணவங்காடிக் கடைக்காரர்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளவேண்டும் என்று டாக்டர் கோர் சுட்டினார்.
சுத்தமின்மை: பிரபல சோயா நிறுவனத்திற்கு தற்காலிக தடை
சோயா உணவு வகைகளைத்(படம்) தயார்செய்யும் நிறுவனமான செங் ஹுவாட் பீன் கர்ட் நிறுவனம் இயங்குவதற்கு எதிராக சிங்கப்பூர்
உணவு அமைப்பு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
15 ஜாலான் தெப்போங்கில் அமைந்துள்ள நிறுவனத்தின் இடத்தில் அமைப்பு சோதனை நடத்தியபோது அங்கு கரப்பான் பூச்சிகள், மாண்ட எலி உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. சிங்கப்பூர் நிறுவனமான செங் ஹுவாட் பீன் கெர்ட், ஈரச்சந்தைகளுக்கு தனது 'தாவ் குவா' எனும் சோயா உணவு வகையை விநியோகித்தும் வந்தது. பாதுகாப்பையொட்டி அதைத் திரும்பப் பெறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிறுவனம் இயங்கும் இடத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

