ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அல்லது கலாசார சின்னங்களாக விளங்கும் கட்டடங்கள் மற்றும் மத்தியப் பகுதிகள் ஒளியூட்டப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சிங்கப்பூரின் 56வது தேசிய தினத்தையொட்டி பிராஸ் பசார்-பூகிஸ் பகுதியில் உள்ள கலாசாரக் கட்டடங்களும் சிவப்பு, வெள்ளை நிறத்தில் ஒளியூட்டப்படும்.
சென்ற ஆண்டு விக்டோரியா அரங்கம், 'தி ஆர்ட்ஸ் ஹவுஸ்' கட்டடம் உள்ளிட்டவை ஒளியூட்டப்பட்டன. இம்முறை தேசிய வடிவமைப்பு நிலையம், அப்ஜெக்டிவ்ஸ் பட, புகைப்பட நிலையம் போன்ற பலருக்கு அதிகம் பரிச்சியமில்லாத இடங்கள் ஒளியூட்டப்படும். தென்கிழக்காசிவாயின் ஆக உயரமான கட்டடமாக இருந்த 'தி கேத்தே'யும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 1939ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 'தி கேத்தே', அந்தக் காலத்தில் சிங்கப்பூரில் குளிர் சாதன வசதியுடன் இருந்த முதல் திரையரங்கம். அங்குதான் முதன்முதலில் அமெரிக்க, பிரிட்டிஷ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இவை உட்பட ஒளியூட்டுக்கு ஏழு கலாசார கட்டடங்களை தேசிய மரபுடைமைச் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. ஆண்டுதோறும் இடம்பெறும் ஒளியூட்டு நிகழ்வோடு இம்முறை இந்த ஏழு கட்டடங்களும் அடுத்த மாதம் ஒவ்வொரு நாளும் மாலை ஏழரை மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒளியூட்டப்படும்.

