சிங்கப்பூரில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் எண்ணிக்கை இப்போது 177,000 ஆகக் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 200,000 ஆக இருக்கிறது என்று ஜூலை 20ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாம்போவில் நடமாடும் தடுப்பூசி நிலையம் ஒன்றில் நேற்று பேசிய அமைச்சர், நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் இதுவரை மூன்று வார காலம் செயல்பட்டு இருப்பதாகவும் முதியோரிடத்தில் தடுப்பூசி நாட்டம் அதிகமாக அவை உதவி வந்துள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, ஜூலை 7ஆம் தேதி முதல் இந்தக் குழுக்கள் ஏறத்தாழ 3,240 பேரை எட்டி இருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்தத் தடுப்பூசி இயக்கம் திறம்பட முன்னேற அடித்தள அமைப்புகளின் முயற்சிகளே பெரும்பாலும் காரணமாக இருப்பதாகக் கூறிய திரு ஓங், தொண்டூழியர்கள் முதியோர் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களை அழைத்து வருகிறார்கள் என்றார்.
மருத்துவர்களை அணுகி அவர்கள் மூலம் முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி செய்வது இந்த அமைச்சு மேற்கொண்டு வரும் மற்றொரு பெரிய முயற்சியாகும்.
இந்த முயற்சியும் நல்ல பலன் அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்து பொது மருத்துவர்களையும் சீன பாரம்பரிய மருத்துவர்களையும் அணுகி முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஊக்கமூட்டும்படி அமைச்சு அவர்களைக் கேட்டுக்கொள்ளும்.
60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியவர்களில் ஏறத்தாழ 77 விழுக்காட்டினர் கொவிட்-19 இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் 187,000 பேர் இனிமேல்தான் முதலாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் புதன்கிழமை அமைச்சர் திரு ஓங் ஃபேஸ்புக்கில் தெரிவித்து இருந்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 மற்றும் அதிக வயதுள்ளவர்கள் இன்னமும் 177,000 பேர்

