மேலும் ஒருவருக்குத் தொற்று; தேவாலயம் இரு வாரம் மூடல்
கிளமெண்டியில் இருக்கும் ஹோலி கிராஸ் தேவாலயத்தில் நடந்த வழிபாட்டில் கலந்துகொண்டவர்களில் வேறு ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து அந்த கத்தோலிக்க தேவாலயம், பக்தர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் கூட்டு வழிபாடுகளையும் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது.
தொற்று இருப்பதாகத் தெரியவந்த மாது ஜூலை 28ஆம் தேதி முதல் தனிமை உத்தரவை நிறைவேற்றி வந்தார். அவருக்குத் தொற்று இருந்தது அடுத்த நாள் தெரியவந்தது. அதற்கு அடுத்த நாளே அவர் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். தேவாலயத்தில் முதல் தொற்று ஜூலை 26ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
கிருமி தொற்றிய மாது ஏற்கெனவே ஒரு சந்தைக்குச் சென்றுவந்தார் என்றும் அங்கு அவருக்குத் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஹோலி கிராஸ் தேவாலயம் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிற்பகல் 1 மணி வரை மூடப்படுவதாக ஹென்றி சியூ பாதிரியார் ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
கிருமி தொற்றிய இருவரும் இந்தத் தேவாலயத்தில் ஜூலை 25ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வழிபாடு நடந்தபோது, ஒரே பகுதியில் இருந்ததாக பாதிரியார் கூறினார். அதே பகுதியில் இருந்த அனைவரோடும் ஏற்கெனவே தொடர்புகொள்ளப்பட்டு உள்ளது.
தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த தேவாலய பக்தர்கள் அனைவரையும் சுகாதார அமைச்சு தொடர்புகொள்ளும் என்றும் அவர்கள் ஜூலை 28ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பாதிரியார் கூறினார்.
அங் மோ கியோ, வெஸ்ட் கோஸ்ட்
டிரைவ் வாசிகளுக்கு பரிசோதனை
அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள புளோக் 556, வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் இருக்கும் புளோக் 510 ஆகிய இரண்டு வீவக புளோக்குகளில் குடியிருப்போருக்குக் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும்.
அந்தப் பகுதிகளில் 17 பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
அந்த 17 பேரில் ஏழு பேர் அங் மோ கியோவில் வசிக்கும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இதர 10 பேர் வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க புலன்விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது. ஜூலை 27க்குப் பிறகு தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் தெரியவந்திருக்கும் யாரும், விரும்பினால் பரிசோதனை செய்துகெள்ளலாம்.
கட்டாய பரிசோதனை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, எண் 8 அங் மோ கியோ ஸ்திரீட் 54 முகவரியில் அமைந்துள்ள வட்டார பரிசோதனை நிலையத்திலும் வெஸ்ட் கோஸ்ட் டிரைவ் 510 புளோக்கிற்கு அருகே இருக்கும் கூடத்திலும் நடக்கும். அனைவரும் அடையாள அட்டையுடன் செல்லவேண்டும். குறுஞ்செய்தி கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மேல் விவரங்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
பிடோக் நார்த் பாலர்பள்ளியில் இரு மாணவர்களுக்குத் தொற்று
பிடோக் நார்த் புளோக் 115ல் உள்ள ஸ்பாக்கல்டாட்ஸ் பாலர் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் நேற்று தெரிவித்தது. அந்த இரு சகோதரர்களும் கடைசியாக பாலர்பள்ளிக்கு ஜூலை 27ம் தேதி வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாளில் பள்ளியில் இருந்த ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் நேற்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்பள்ளி உடனடியாக மூடப்பட்டு அங்கு நேற்று முன்தினமும் நேற்றும் சுத்தப் படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

