ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் திறப்பு; பரபரப்பில்லை; சில ஊழியர்களே வருகை

ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் திறப்பு; பரபரப்பில்லை; சில ஊழியர்களே வருகை

1 mins read
5b373f6e-7576-4c89-ba23-9af186938338
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திற்குள் செல்வதற்கு முன் ஊழியர்கள் பாதுகாப்பு உடை அணிந்துகொண்டனர்.படம்: திமித்தி டேவிட் -

கொவிட்-19 காரணமாக இரண்டு வார காலம் மூடப்பட்டு இருந்த ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் நேற்று திறக்கப்பட்டது. என்றாலும் அது பரபரப்பு இன்றி அமைதியாகவே காணப்பட்டது.

அந்தத் துறைமுகத்தின் நுழைவாயிலில் நேற்று காலை 6 மணிக்கும் 10 மணிக்கும் இடையில், அங்குள்ள கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒன்பது பேர் மட்டுமே காணப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த வாகனத்தில் வந்து அதை வெளியே நிறுத்திவைத்தனர். சிலர் டாக்கியில் வந்தனர்.

கிருமிநாசினி தெளித்து கடையைச் சுத்தப்படுத்துமாறு தங்கள் முதலாளி கூறியதாகவும் தாங்கள் அதற்காகவே வந்ததாகவும் தன்னிடம் பேசிய ஊழியர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

அந்தத் துறைமுகத்தில் மீன்களை இறக்குவதற்கும் மொத்தமாக விற்பனை செய்வதற்கும் நாளை திங்கட்கிழமை முதல் அனுமதி கொடுக்கப்படும்.

இருந்தாலும் அதற்குத் தயாராகும்படி தங்கள் முதலாளிகள் தங்களிடம் கூறவில்லை என்றும் அவர் கள் கூறினர். துறைமுகத்தின் உள்ளே செல்ல காலை 9.40 மணிக்குப் பிறகுதான் ஊழியர்களுக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள்ளாக சிலர் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர்.

எஞ்சிய ஊழியர்கள் பாதுகாப்பு உடைகளுடன் சிங்கப்பூர் உணவு, பான முகவை அதிகாரிகளைப் பின் தொடர்ந்து துறைமுகம் உள்ளே சென்றனர்.

பிறகு இதர மூன்று ஊழியர்கள் துறைமுகத்தின் உள்ளே சென்றனர். அவர்களும் தங்கள் கடைகளைச் சுத்தப்படுத்த வந்ததாகத் தெரிந்தது.

ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் தொற்று ஏற்பட்டதை அடுத்து அது ஜூலை 17ஆம் தேதி மூடப்பட்டது.