ஆஸ்திரேலியாவில் இருந்தும் சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் இருந்தும் இங்கு வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் கடுமையாக்குகிறது.
அந்த இடங்களில் கொவிட்-19 தொற்று அதிகமாவதே இதற்கான காரணம் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடுமையான கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும்.
ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 21 நாட்களுக்குள் யாராவது சென்று வந்திருந்தால் அவர்கள் ஏழு நாட்க களுக்குப் பதிலாக இனி 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
அவர்கள் தங்குமிடத்தில் அல்லது குறிப்பிட்ட இடங்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இங்கு வருவதற்கு முந்தைய 21 நாட்களுக்குள் வேறு இதர பகுதிகளுக்கும் அவர்கள் சென்று வந்திருக்கக்கூடாது.
பயணிகள் இங்கு தரையிறங்கும்போதும் தனிமை உத்தரவு முடியும்போதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். தனி மையில் இருக்கையில் 3வது, 7வது, 11வது நாட்களில் விரைவு பரிசோதனையை செய்துகொள்ளவேண்டும்.
சிங்கப்பூரைவிட்டு புறப்பட்டுச் செல்வதற்கு 72 மணி நேரம் முன்னதாக, தங்களுக்குத் தொற்று இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள், நிரந்தரவாச உரிமையை அல்லது அனுமதியை இழக்க வேண்டி வரலாம்.
கடந்த 21 நாட்களுக்குள் ஜியாங்சு சென்று வந்திருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள், இங்கு தங்கள் வசிப்பிடத்தில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்கவேண்டும். இங்கு தரையிறங்கும்போதும் தனிமை உத்தரவு முடிவடையும் போதும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

