டெல்டா வகை கொரோனா கிருமித்தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உள்ளூரில் அமல்படுத்தப்பட்டுள்ள உயர் கட்டுப்பாடுகள் சிங்கப்பூர் தொழிலாளர் சந்தை ேமம்பாட்டுக்கு தடையாக விளங்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையில் இருக்கும் ஊழியர்
களின் எண்ணிக்கை 15,700 குறைந்ததாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முந்தைய காலாண்டில், நான்கு காலாண்டுகளாக குறைந்து வந்த வேலைகள், முதன்முதலாக வளர்ச்சி கண்டது.
இதுபற்றிக் கருத்துரைத்த மனிதவள அமைச்சின் நிரந்தரச் செயலாளர் அவ்பெக் காம், "இரண்டாம் காலாண்டில் வேலையில் இருக்கும் குடியிருப்பாளர் எண்ணிக்கை மிதமான வளர்ச்சி கண்டது.
ஆனால், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் ஒப்பந்தப்படி பணியை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதால் இந்த நிலை மாறியது.
"தற்பொழுது பொதுச் சுகாதார காரணங்களால் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு வரவழைப்பது சவால்மிக்கதாக உள்ளது," என்று விளக்கினார்.
எனினும், வேலையின்மை விகிதம் கொரோனா கொள்ளைநோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தபோதிலும், சென்ற மாதம் மேலும் குறைந்தது என அமைச்சு தெளிவுபடுத்தியது. இதன் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தை எட்டிய வேலையின்மை விகிதம், அதன்பின் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சு கூறுகிறது.
சிங்கப்பூர் தனது தடுப்பூசி போடும் இலக்கை நோக்கி முன்னேறி வருவதால் அதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளும் நாளடைவில் தளர்த்தப்டும்.
இதனால், ஆண்டின் இரண்டாம் பாதியில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து கீழ்நோக்கிச் செல்லும் என்று கூறுகிறார் எடிடிஎக்ஸ் எனப்படும் மின்னிலக்க பங்குப் பரிவர்த்தனை நிறுவனத்தில் முதலீட்டுச் சந்தைப் பிரிவில் மூத்த துணைத் தலைவராக உள்ள சேமுவல் கான்.
"ஆனால், உருமாறிய டெல்டா வகைக் கிருமி, அரசாங்க ஆதரவு நடவடிக்கைகள் முடிவுக்கு வருவது போன்றவை வேலைவாய்ப்பு சூழலில் இருக்கும் ஆபத்துகள்," என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, உலகில் பெருகிவரும் கொவிட்-19 தொற்று, அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் போக்கில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
மனிதவள அமைச்சு சென்ற மாதம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற 64% நிறுவனங்கள் தாங்கள் ஊழியர் ஆட்சேர்ப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்தன.
ஒப்புநோக்க, இந்த விகிதம் கடந்த மார்ச் மாதம் 73 விழுக்காடாக இருந்ததையும் அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், உயர் கட்டுப்பாடுகள் நீண்டநாள்கள் நீடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

