மக்கள் செயல் கட்சியின் நகர மன்றங்களால் நிர்வகிக்கப்படும் எட்டு ஈரச் சந்தைகள், உணவங்காடி நிலையக் கடைக்காரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 குழுமங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள வட்டாரங்களில் உள்ள இந்தக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
வர்த்தகம் செய்ய முடியாத காலகட்டத்தில் கடைக்காரர்களுக்கு உதவும் வகையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் மூடப்படும் காலகட்டத்தின் சேவை, பராமரிப்பு கட்டணம், தற்காலிக தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றைப் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் செலுத்த வேண்டியதில்லை என்று மசெகவின் 15 நகர மன்றங்களின் ஒருங்கிணைப்புத் தலைவரான திரு லிம் பியாவ் சுவான் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்கவும் இடத்தைச் சுத்தம் செய்ய வகை செய்யவும் பாதிக்கப்பட்ட சந்தைகளும் உணவங்காடி நிலையங்களும் இரண்டு வாரங்
களுக்கு மூடப்படும்.
பாதிக்கப்பட்ட 1,076 கடைக்காரர்களுக்கு மொத்தம் $70,000 பெறுமானமுள்ள கட்டடண விலக்கு வழங்கப்படும் என்று மவுண்ட்பேட்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லிம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட கடைக்காரர்
களுக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவுடன் இந்தக் கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது.
"கடைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க இந்த நிதி உதவி அவர்
களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்," என்று திரு விம் கூறினார்.
பூன் லே பிளேஸ் ஃபுட் விலேஜ், புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், சோங் பூன் சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், சொங் பாங் சந்தை, கிளமெண்டி 448 சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், ஹேக் ரோடு சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், ஹோங் லிம் சந்தை மற்றும் உணவங்காடி நிலையம், வாம்போ டிரைவ் சந்தை ஆகியவற்றின் கடைக்காரர்களுக்குக் கட்டண விலக்கு வழங்கப்படும்.
இந்த இடங்களை அங் மோ கியோ நகர மன்றம், ஜாலான் புசார் நகர மன்றம், ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம், மரின் பரேட் நகர மன்றம், நீ சூன் நகர மன்றம், தஞ்சோங் பகார் நகர மன்றம், வெஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் ஆகிய ஏழு நகர மன்றங்களும் நிர்வகிக்கின்றன. இவ்விடங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
"பாதிக்கப்பட்ட கடைக்காரர்களில் பலர் எங்கள் வட்டாரத்தின் குடியிருப்பாளர்கள்.
"கடைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்
களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நமது சமூகத்துக்கு சேவையாற்றி வருபவர்கள். வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் படும் வேதனை எங்களுக்கு நன்கு புரிகிறது," என்றார் திரு லிம்.

