சிங்கப்பூரில் மிக மோசமான உயிர்க்கொல்லி நோய்களில் கல்லீரல் புற்றுநோயும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆரம்பக்கட்டத்திலேயே கல்லீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடிப்பது தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையொட்டி தேசிய அளவிலான ஆய்வு ஒன்று அறிமுகப்
படுத்தப்பட்டுள்ளது.
கல்லீரல் புற்றுநோய் சிங்கப்பூர் ஆடவர்களிடையே மூன்றாவது ஆக மோசமான உயிர்க்கொல்லி நோயாகத் உள்ளது. சிங்கப்பூர் பெண்களிடையே அது நான்காவது ஆக மோசமான உயிர்க்கொல்லி நோயாக உள்ளது.
ஆனால் கல்லீரல் புற்றுநோயால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும்பாலானோருக்கு ஆரம்பக்கட்டத்தில் தெரிவதில்லை.
20 விழுக்காட்டினருக்கு மட்டுமே ஆரம்பத்திலேயே தெரிய
வருகிறது. அந்த நோய் இருப்பது ஆரம்பத்திலேயே தெரியவந்தால் குணம் அடையும் சாத்தியம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வுக்கு சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையம் தலைமை தாங்குகிறது. துல்லியமான ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் முறையே அதன் இலக்கு.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் ஒருவருக்கு இருப்பதைக் கண்டுபிடிக்கவும் நோய் ஏற்படாமல் இருக்கவும் செயற்கை நுண்ணறிவு முறை ஒன்று மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளித்திருக்கிறேன். அந்த நோயை ஆரம்பகட்டத்தில் கண்டுபிடிக்கக்கூடிய சிகிச்சை முறை அவசியம்.
"அத்தகைய சிகிச்சை முறை இருந்தால் மேலும் தரமான சிகிச்சை வழங்கி உயிரைக் காப்பாற்றலாம்," என்று புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் பிரதான ஆய்வாளருமான பேராசிரியர் பியர்ஸ் சாவ் தெரிவித்தார்.
கல்லீரல் சிரோசிஸ், ஹெப்படைடிஸ் பி, ஹெப்படைடிஸ் சி, மதுபானம் அருந்தாதபோதிலும் கல்லீரலில் சேரும் அதிகளவு கொழுப்பு, அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துதல் ஆகியற்றால் சிங்கப்பூரில் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மதுபானம் அருந்தாதபோதிலும் கல்லீரலில் அதிக அளவில் கொழுப்பு சேருவது பெரும்பாலும் மேற்கத்திய உணவுவகைகளால் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை அளவு அதிகமுள்ள குளிர்பானங்களை அருந்துதல் குக்கீஸ் போன்ற 'புருக்டோஸ்' அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் கல்லீரலில் அதிக அளவு கொழுப்பு சேருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையத்தின் தலைமையின்கீழ் இந்த ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்படும்.
ஆய்வில் பங்கெடுப்போர் ஒவ்வொரு ஆறு மாதமும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மொத்தம் ஏழு முறை அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்.
இந்தக் கண்காணிப்புக் காலகட்டத்தில் அவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டால் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.
அவர்கள் தொடர்ந்து ஆய்வில் பங்கெடுக்கலாம்.
இந்த ஆய்வில் பங்கெடுப்பதற்காகக் கடந்த ஏப்ரல் மாதத்தி
லிருந்து 200க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டுக்குள் 2,000 பேரைச் சேர்க்க ஆய்வு இலக்கு கொண்டுள்ளது.

