பலரின் மனதையும் பாதித்த இரு சம்பவங்கள் கடந்த மாதம் நடந்தன. ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மீது வலைக்கம்பம் விழுந்து, பின்னர் அந்த வாலிபரும் உயிரிழந்தார்.
எதிர்பாராமல் நடந்தவை. நண்பன் தாக்கப்பட்டு இறந்துவிடுவான் என்று அந்த ரிவர் வேலி மாணவரின் நண்பர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். வலைக்கம்பம் விழப்போகிறது என்று உடன் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த அந்த நண்பனும் நினைத்திருக்கமாட்டான். ஆனால் மரணம் நேர்ந்தது. சிறு வயதினர் இறப்பது என்பது சாதாரணமாக நிகழ்வதில்லை. அவ்வாறு நடப்பது இயற்கைக்கு மாறானது, நியாயமும் இல்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக இளம்வயதினரும் இறந்து போகின்றனர். அத்தகைய இறப்பால் ஏற்படும் இழப்பு அதிகம்.
சில சமயங்களில் இளையர்களுக்குத் தங்களின் குடும்பத்தினரைக் காட்டிலும் நண்பர்களின் அன்பு முக்கியமாகத் தோன்றுவதுண்டு. அதனால், ஆருயிர்த் தோழன் திடீரென்று ஒருநாள் இல்லாமல் போகும்போது அந்த இளமனதில் உண்டாகும் வலி பன்மடங்காகலாம். இந்தத் துயரத்தைப் பெற்றோர், ஆசிரியர் அல்லது வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாது. மகனின் நண்பன் இறந்துவிட்டதை அறிந்துகொள்ளும் ஒரு தாயார், அந்த நண்பனைப் பற்றி அதிகம் அறிந்திருக்கமாட்டார். அதனால் தம் மகனுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் முழுமையாக உணரமாட்டார்.
ஒருவரின் இறப்பை ஏற்றுக்கொண்டு உலகம் மட்டும் நகருமே தவிர, நண்பனை இழந்தவன் அதிலிருந்து மீண்டுவரத் தவிப்பான்.
இனி யாருடன் நான் விளையாடுவேன், என் நண்பனுக்கு இப்படி நடந்துவிட்டதே என்பதை என்னால் நம்ப முடியவில்லை, இன்று காலைதான் அவன் எனக்கு 'வாட்ஸ்அப்' அனுப்பினான் என்று பல எண்ணங்கள் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். கடந்த காலத்திற்குச் சென்று அந்த இறப்பு நேராமல் தடுக்க முடியாதா என்று கூட மனம் நொந்துகொள்ளும்.
கண்ணீர் விடுங்கள்
நோய் காரணத்தால் எதிர்பார்த்த மரணமாக இருந்தாலோ திடீரென்று நேர்ந்த மரணமாக இருந்தாலோ, முதலில் இறந்த நண்பனுக்காக அழுவதில் தவறேதும் இல்லை என்பதை உணர வேண்டும். அழுகை என்பது பலவீனத்தின் அடையாளமல்ல. அது மீண்டுவருவதன் முதல் படியாகவும் இருக்கலாம்.
நினைவுக் கூட்டத்திற்கு
செல்லுங்கள்
நண்பனின் நினைவாக நடக்கும் பிரார்த்தனைகளுக்குச் செல்லவும். அந்த நண்பனை இழந்துவிட்ட வேறு நபர்களையும் சந்தித்துப் பேசும்போது ஆறுதலாக இருக்கும். அத்துடன் நண்பனிடமிருந்து முறையாக விடைபெற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அது அமையலாம். நண்பன் இனி இல்லை என்பதை மனமும் உணரத் தொடங்கும்.
பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்
சிலர் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கில் மூழ்கிவிடுவர். குத்துச்சண்டை போன்ற உடற்
பயிற்சியில் ஈடுபடுவது, இயற்கை பூங்காவில் நடந்து செல்வது, உரத்த இசைக்கு ஆடிப்பாடுவது, நகைச்சுவைத் திரைப்படங்களைப் பார்ப்பது போன்றவற்றில் நேரத்தைச் செலவிடும்போது இழந்ததை மெல்ல மறக்கலாம். செல்லப்பிராணியின் பாசமும் இதமளிக்கும்.
பிடித்தமான பெரியவர் ஒருவரிடம்
மனந்திறந்து பேசுங்கள்
உங்கள் நிலையைப் பெரியவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்று எண்ணிவிட வேண்டாம். சில சமயம் குடும்பத்தில் உங்களுக்குப் பிடித்தமான ஓர் உறவினர் இருப்பார் அல்லது உங்களின் தொடக்கப்பள்ளி ஆசிரியருடன் இன்னமும் தொடர்பில் இருக்கலாம். அவர்களிடம் பேசுங்கள்.
புது அடையாளம் ஒன்றை
ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
நண்பன் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு உங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் இறந்து போயிருந்தால் உங்கள் நண்பன் அவன் வாழ்க்கையை நல்ல முறையில் தொடரவேண்டும் என்று நீங்கள் எப்படி விருப்பப்
படுவீர்களோ, அதேபோல் உங்களின் நல்வாழ்வை, இறந்த உங்கள் நண்பரும் விரும்புவார் என்பதை உணர்ந்து வாழுங்கள்.
நினைவகம் தொடங்குங்கள்
நண்பனுக்கு ஃபேஸ்புக் பக்கம் இருந்தால், அங்கு உங்களின் எண்ணங்களைப் பதிவிடுங்கள். நண்பன் ஞாபகமாக ஒரு வலைப்பதிவைத் தொடங்குங்கள். புகைப்
படங்கள், நினைவில் நின்ற சம்பவங்கள், காணொளிகள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளும்போது நண்பனின் நினைவாக ஒரு நிரந்தரத் தளம் இணையத்தில் இருக்கும்.
உதவி நாட முன்வாருங்கள்
மனநலத்தின் முக்கியத்துவம் குறித்துப் பள்ளிகளில் உங்களின் ஆசிரியர்களும் பள்ளி ஆலோசகர்களும் பேசி வருகின்றனர். அந்தத் தகவல்களை உள்வாங்கிக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இளையர்களுக்கு மனநல ஆலோசனையும் ஆதரவும் வழங்கும் தளங்களும் உண்டு.
CARE Singapore 6978 2728
TOUCHline 1800 377 2252
Fei Yue Community Services
ec2.sg
நண்பன் ஏன் இறந்தான் என்னும் கேள்விக்குப் பதில் கிடைக்கவே கிடைக்காது என்பதை உணர்வது முக்கியம். இழப்பின் துயரத்திலிருந்து மீண்டுவரும் பயணம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதை ஏற்றுக்கொண்டு உங்களிடத்தில் நீங்களே பொறுமை, கருணை இரண்டையும் காட்ட மறந்துவிடாதீர்கள்.

