எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்க்கும் உதவி தேவைப்படுவோர்க்கும் உதவ முயலும்போது, அவர்களின் அவலநிலை குறித்த படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வலியுறுத்தி உள்ளார்.
அத்தகையோரைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சமூக சேவை அலுவலகங்களில் உள்ள அதிகாரி ஒருவரிடம் அறிமுகம் செய்துவைப்பதே அவர்களுக்கு உதவ மிகப் பொருத்தமான, செயல்திறன்மிக்க வழி என்றும் அதன்மூலம் அவர்களுக்கு நிபுணத்துவ உதவி வழங்க முடியும் என்றும் திருவாட்டி சுன் கூறி இருக்கிறார்.
காகித அட்டைச் சேகரிப்பாளர்கள், யாசகர்கள், கண்ட இடங்களில் உறங்குவோர் போன்றோர்க்கான உதவித் திட்டங்கள் குறித்து ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டெனிஸ் புவா வினா எழுப்பினார்.
அத்துடன், உதவி தேவைப்படுவோர் குறித்த படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடும் வழக்கத்தை ஊக்குவிக்காதிருக்க தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
கடந்த மே மாதம், முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரிடம் போலிசார் மோசமாக நடந்துகொண்டதாகக் கூறி, 'தி ஆன்லைன் சிட்டிசன்' இணையத்தளம் காணொளிகளுடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, 'அதில் உண்மையில்லை' என்று அதிகாரிகளும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகமும் மறுப்பு தெரிவித்தனர்.
பின்னர், தம் தாயார் தொடர்பான காணொளி நேர்காணலுக்கு மன்னிப்பு கோரும்படி அம்மூதாட்டியின் மகன் சென்ற மாதம் விடுத்த கோரிக்கையையும் அந்த இணையத்தளம் நிராகரித்தது.
திருவாட்டி புவாவின் கருத்துடன் உடன்பட்ட திருவாட்டி சுன், "எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள ஒருவர் குறித்த காணொளியை அல்லது படத்தைப் பதிவிடுவது, அவரது தனிப்பட்ட உரிமையையும் ரகசியத்தன்மையையும் மீறுவதாக இருக்கலாம் என்பதுடன் அவர்மீது தேவையில்லாத கவனத்திற்கும் வித்திடக்கூடும்," என்றார்.
அது அவருக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாமல் போய்விடலாம் என்று திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.
அத்துடன், அவரது அந்த அவலநிலைக்குக் குடும்ப உறவுநிலையே காரணமாக இருக்கும் பட்சத்தில், அத்தகைய படங்களும் காணொளிகளும் அவரது குடும்ப உறவுமுறைகளை மேலும் மோசமாக்கிவிடக்கூடும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் பொதுமக்களுக்கு வலியுறுத்து

