சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமி தொற்றிய 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு தீவிரமற்ற பாதிப்பே இருந்துள்ளது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அவர்களில் யாருக்கும் இதுவரை தீவிர சிகிச்சையோ உயிர் வாயு இயந்திரத்தின் உதவியோ தேவைப்படவில்லை என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த வயதினருக்குத் தடுப்பூசி போடும் சாத்தியத்தைப் பற்றியும் அவர் பேசினார்.
பன்னிரெண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் முன்னோட்டச் சோதனைகள கொவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணத்துவச் செயல்குழு, கண்காணித்து வருவதாகவும் அது தயாராகும் போது பரிந்துரைகளை வெளியிடும் என்றும் திரு சான் கூறினார்.
அத்துடன் இளம் பிள்ளை களைப் பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் கல்வி அமைச்சர் விவரம் அளித்தார்.
சிங்கப்பூர் கொவிட்-19 கிருமித் தொற்றுடன் வாழப் பழகுவதை நோக்கிச் செல்லும் வேளையில், பள்ளிகள் அவற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்றார் அவர்.
சிங்கப்பூர் இரண்டாம் கட்டத்துக்கு விழிப்பு நிலையை உயர்த்தியுள்ள இந்நிலையில் 12 வயதுக்கும் குறைவான பிள்ளை களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து பற்றி செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஹி டிங் ரூ கேட்ட கேள்விக்கு திரு சான் பதில் அளித்தார்.
கொவிட்-19 தொற்று பற்றி இதுவரை கிடைத்த தகவல்கள், பெரியவர்கள், முதியவர்கள் ஆகியோரைவிட சிறுவர்களுக்கு நோயால் குறைவான பாதிப்பு ஏற்படுவதைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் டெல்டா வகைக் கிருமி தொற்றிய 12 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்குக் கூட சிறிய பாதிப்பே ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

