மூன்றாம் தலைமுறை தலைமையில் தனித்துவம்

பாரம்பரியம் நிறைந்த, வரலாற்றுச் சிறப்புவாய்ந்த உணவகத்தை சிங்கப்பூரில் நடத்துவது எளிதான காரியம் அல்ல.

சிராங்கூன் சாலையில் சுமார் 74 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சைவ உணவகமான கோமள விலாஸின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை கடந்தாண்டு இறுதியில் இளையரான திரு கு.ராஜகுமாருக்கு உருவானது.

கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழல் ஒட்டுமொத்த லிட்டில் இந்தியா உணவகங்களின் வருமானத்தைப் பாதித்துள்ள போதும், இந்த இக்கட்டான காலகட்டத்திலும் எதிர்காலத்துக்குத் திட்டமிடலாம் என்பதில் இந்த 35 வயது இளையர் உறுதி கொண்டுள்ளார்.

“இந்திய சைவ உணவின் மீதான பேரார்வம் இக்கால இளைய தலைமுறையினரைச் சென்றடையவில்லை என்றே கூறுவேன். அதனை மாற்றி இந்திய சைவ உணவும் ருசியானது என்றும் எக்காலத்திலும் ஈர்க்கக்கூடியது என்பதை அனைவ ருக்கும் உணர்த்துவதே என் நோக்கம்,” என்று தமிழ் முரசுடனான நேர்காணலில் திரு ராஜகுமார் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி, திரு ராஜகுமாரின் தந்தையும் கோமள விலாஸின் முந்தைய உரிமையாளருமான திரு ராஜு குண­சே­க­ரன் அவரது 68வது வயதில் காலமானார். அதன் பிறகு, குடும்பத் தொழிலை நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்பொறுப்பை ஏற்ற பிறகு, கிருமித்தொற்றின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு, ஊழியர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை அவர் சமாளித்து வருகிறார்.

இதில் ஆகப் பெரிய பிரச்சினை, உணவகத்திற்கு ஊழியர்களைச் சேர்ப்பதுதான். அது தொழிலை மூடும் நிலைக்குத் தள்ளக்கூடியது என்றார் அவர்.

“கிருமித்தொற்றுச் சூழல் அனைத்துப் பிரச்சினைகளையும் பன்மடங்கு பெருக்கி யுள்ளது. எல்லைக் கட்டுப்பாடுகளால் எங்கள் மலேசிய ஊழியர்கள் பலர் நாடு திரும்பினர்.

“அத்துடன், சமையலுக்கு இந்தியா விலிருந்து வரும் சமையல் வல்லுநர் களையே பெருமளவு நம்பியுள்ளோம். தற்போது அவர்களை வேலைக்கு அமர்த்துவது இன்னும் கடினமானதால், ஆபத்தின் விளிம்பில் இருக்கிறோம்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒன்றும் செய்யாவிட்டால் அல்லது கவனமாக செயல்படாவிட்டால் உணவகத்தை மூடும் நிலைக்கு ஆளாகலாம்,” என்றார் திரு ராஜகுமார்.

தேக்காவிலேயே மூன்று கிளைகள் வைக்கும் அளவுக்கு ஒரு கட்டத்தில் கோமள விலாஸ் நிர்வாகத்திடம் ஆள்பலம் இருந்தது.

ஆனால் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன், ஊழியர் பற்றாக்குறையினால் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கிளை மூடப்பட்டது.

பஃப்பளோ ரோடில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கிளைக்கும் கடந்த ஆண்டு இதே நிலை. அதிக வாடகையும் ஊழியர் பற்றாக்குறையும் காரணங்கள்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுற்றுப் பயணிகள் அதிகம் வராததால் சிராங்கூன் சாலையில் இயங்கும் கோமள விலாஸ் உணவகத்தின் பிரதானக் கிளை குறைந்தது 30% வருமானத்தை இழந்துள்ளது.

மேலும், அண்மையில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டதும் வர்த்தகத்தைப் பாதித்தது.
“உணவு விநியோகத் தளங்களைப் பயன்படுத்தும் முடிவு, கிருமிப்பரவலால் எல்லாமும் முடங்கிய நேரத்தில் கைகொடுத்தது.

அவ்வழி இருந்ததால்தான், வர்த்தகத்தைத் தொடரமுடிந்தது,” என்றார் அவர்.

தற்போதைய வர்த்தகச் சூழலையும் லிட்டில் இந்தியாவில் இயங்கும் மற்ற உணவகங்களின் போட்டியையும் எண்ணி அவர் மனம் தளரவில்லை. எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.

“இக்காலகட்டத்திலும் தேக்காவுக்கு வர இந்திய சமூகத்தினருக்கு தொடர்ந்து பல காரணங்கள் உண்டு. தேவையான பொருட்களை வாங்க வருபவர்கள், இங்குள்ள இந்திய உணவகங்களில் உணவை வாங்கிச் செல்கின்றனர்.

அதனால் கூட்டம் குறைந்தாலும் வர்த்தகம் முழுமையாக பாதிக்கப்படவில்லை,” என்று கூறும் திரு ராஜகுமாரின் முழு கவனமும் தமது உணவகத்தின் சேவை யையும் உணவுத் தரத்தையும் மேம்படுத்து வதில் குவிந்துள்ளது.

இளையர்களை ஈர்க்க புதிய திசை

இளைய தலைமுறையினரை கோமள விலாஸ் பக்கம் திருப்பும் முயற்சியாக, இளையர்களுக்குப் பிடித்த சூழலையும் வடிவமைப்பையும் கொண்ட இந்திய சைவ உணவகத்தை ரிவர் வேலி சாலையில் அவர் திறந்துள்ளார்.

ஃபெனல் (Fennel) எனும் அந்த உணவகம், கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது.

வழக்கமான தோசை, சாப்பாடு ஆகியவற்றுக்கு அப்பால், இங்கு புதிய உணவுப் பட்டியல் உள்ளது. ‘சைவ’ ரசம் கோழி ‘மினி-பர்கர்’, ‘சைவ’ காரமான மீன், உருண்டைக்கறி, வறுத்த காளான் போன்றவை அதில் அங்கம் வகிக்கின்றன.

புதிய உணவகத்திற்கு சிங்கப்பூரர் களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் சூழல் மேம்பட்டதும் வேறு சில கிளைகளைத் திறக்க விரும்புவதாகவும் திரு ராஜகுமார் கூறினார்.

மேலும், வர்த்தக செயல்பாடுகளை மேம்படுத்த கடந்த ஆண்டில் ஹார்பர் சாலையில் ஒரு மத்திய சமையல் அறையையும் இவர் தொடங்கினார்.

புதிய பாதையை நோக்கிச் சென்றாலும் பாரம்பரியத்தில் ஊறிப் போன சிராங்கூன் சாலை கோமள விலாஸ் கிளையின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று திரு ராஜகுமார் உறுதியளித்தார்.

“ஊழியர்களுக்கு வயிறார உணவு வழங்கி அவர்கள் திருப்தியுடன் வேலை செய்யும் சூழலை உருவாக்கவேண்டும் என்று எனது தாயார் திருமதி கோமதி சொன்ன அறிவுரையை இன்றுவரை கடை பிடித்து வருகிறேன்,” என்று தமது பெற்றோரை நினைவுகூர்ந்தார் அவர்.

கடந்த நான்காண்டுகளாக, அவருடைய தங்கையான 29 வயது குமாரி வசந்தி அண்ணனுக்கு தொழிலில் உதவுவதுடன் புதிய உணவகத்தின் செயல்பாடுகளுக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார்.

தமது தந்தை திரு குணசேகரன் சாப்பிடும் உணவில் என்ன குறை உள்ளது என்று உடனடியாகக் கண்டறியும் ஆற்றல் கொண்டவர் என்று புகழாரம் சூட்டிய திரு ராஜகுமார், தாமும் அதை எட்ட முயற்சி செய்து வருவதாகக் கூறினார்.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தகத் தகவல் தொழில்நுட்பம் துறையில் பட்டயக்கல்வி. பின்னர் தேசிய சேவை. அதன் பிறகு, தமது 22வது வயதில் இவர் குடும்பத் தொழிலில் இணைந்தார்.

திரு ராஜகுமாருக்கு ஓர் அக்காவும் இரண்டு தங்கைகளும் உள்ளனர். எனினும் வளரும் பருவத்திலிருந்தே எதிர்காலத்தில் அவர் குடும்பத் தொழிலை எடுத்து நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

“தொடங்கும்போது தொழிலைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. வழிகாட்டுவதற்கும் யாரும் இல்லை. முன்பு தீபாவளி சமயத்தில் கடையில் இனிப்புப் பதார்த்தங்களைப் பொட்டலம் போட்டதுதான் எனக்கு இருந்த ஒரே அனுபவம்.

“உணவகத்தில் பல மணி நேரம் நின்று செயல்பாடுகளை ஆராய்ந்து பகுத்தறிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்த்துப் படிப்படியாக தொழிலைக் கற்றுக்கொண்டேன்,” என்று ஆரம்பகால அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் திரு ராஜகுமார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் நாட்டிங்ஹெம் பல்கலைக்கழகத்தில் கணக்கியல், நிதித் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளச் சென்ற திரு ராஜகுமார், விடுமுறையில் நாடு திரும்பியபோது கோமள விலாஸில் பணியாற்றினார்.

அச்சமயத்தில்தான் அவரது ஆலோசனையின்படி உணவகத்தில் வட இந்திய உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அது நல்ல பலன் ஈட்டியது என்றார் அவர்.
கூச்சசுபாவம் கொண்ட திரு ராஜகுமார் வாடிக்கையாளர்களுடனும் ஊழியர்களுடனும் தமிழில் உரையாட சிரமப்பட்டாலும் நாளடைவில் அந்நிலை மேம்பட்டது.

காலம் சொல்லித் தந்த பக்குவம்

“உணவகத்தில் சேர்ந்த முதல் நாளன்று சமையல் வல்லுநர் ஒருவர் சக ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்டார். என் தந்தை அவரை மன்னிப்பதாகத் தான் இருந்தார். ஆனால் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக ஊழியரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

“அப்பா ஏன் அவரை மன்னிக்க தயாராக இருந்தார் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். அவரது சூழ்நிலையில் இன்று நான் இருந்திருந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கடைப்பிடித்து அதே முடிவைத்தான் எடுத்திருப்பேன்,” என்று திரு ராஜகுமார் கூறினார்.

கோமள விலாஸ் உணவகத்தைத் தொடங்கியவர் அவரது தாத்தா திரு முருகையா ராஜூ. 1947ஆம் ஆண்டில் சிராங்கூன் சாலையில் இந்த உணவகத்தை அவர் தொடங்கினார்.

நல்ல எதிர்காலத்தைத் தேடி பட்டுக்கோட்டையிலிருந்து பதின்ம வயது இளையராக 1936ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திரு முருகையா ராஜூ, கருணா நந்தவிலாஸ் எனும் இந்திய உணவகத்தில் பணியாற்றினார்.

கடினமாக உழைத்து, பணம் சேமித்து, முதலாளி ஓய்வுபெற்றதும் அந்த உணவகத்தை வாங்கி, தம்மை அன்பாகப் பார்த்துக்கொண்ட முதலாளியின் மனைவி திருமதி கோமளாவின் பெயரில் கோமள விலாஸ் உணவகத்தைத் திறந்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அவர், 2005ஆம் ஆண்டில் காலமானார். திரு ராஜூவின் ஏழு பிள்ளைகளில் மூத்த மகனான திரு ராஜூ குணசேகரன் தொழிலை வழிநடத்தினார்.

“என் தந்தையும் தாயாரும் உணவக செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபட்டதால், எங்கள் வாழ்க்கையில் எங்கள் குடும்பத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அதனைக் கட்டிக்காத்து மென்மேலும் வளரச்செய்வது எனது கடமை. எனவே வர்த்தகத்தை எவரிடமும் விற்கும் எண்ணமில்லை,” என்றார் திரு ராஜகுமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!