இலங்கை கடற்கரை மாசுவை அகற்ற எட்டு சாதனங்கள் வழங்கி சிங்கப்பூர் குழுமம் உதவி

இலங்கை கடற்கரை மாசுவை அகற்ற எட்டு சாதனங்கள் வழங்கி சிங்கப்பூர் குழுமம் உதவி

2 mins read
542795c6-25f9-4e52-aa7e-e2617d2fe402
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை காலம் தொடங்கும் முன்னர் கடற்கரை மாசுவை அகற்ற வேண்டிய அவசரத் தேவை எழுந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரில் உள்ள லாப நோக்கமற்ற ஒரு குழுமம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடற்கரை துப்புரவுக்கான சாதனங்களை வழங்கி உதவி உள்ளது. 'அலையன்ஸ் டு எண்ட் பிளாஸ்டிக் வேஸ்ட்' குழுமம் S$243,162 மதிப்புள்ள சாதனங்களை இலங்கைக்கு வழங்கி உள்ளது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல் ஒன்று கடந்த மே மாதம் இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அதன் காரணமாக ஏராளமான எண்ணெய் மற்றும் ரசாயனக் கழிவுகள் கொழும்பு கடலோரப் பகுதிகளில் சிதறி பெரிய அளவிலான மாசு உருவானது.

பிளாஸ்டிக் கழிவு மாசு 240 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கடலோரப் பகுதிகளைப் பாதித்துள்ளதாக அலையன்ஸ் குழுமப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனைச் சுத்தப்படுத்தும் பணி ஏற்கெனவே நடந்து வரும் நிலையில் அடுத்தகட்டப் பணிக்கு நன்கொடை அவசியம் என கருதி சாதனங்களை இலங்கைக்கு வழங்க முடிவெடுத்ததாக அவர் கூறினார்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை காலம் தொடங்கும் முன்னர் கடற்கரை மாசுவை அகற்ற வேண்டிய அவசரத் தேவை எழுந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் தாமதம் காட்டினால் மாசு மீண்டும் கடலுக்குள் சென்று வேறு நாட்டின் கடற்கரையில் தேங்கும் அபாயம் உள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

மணல் மேல்பரப்பில் தேங்கிய பெரும்பாலான பிளாஸ்டிக் துகள்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக பிளாஸ்டிக் துண்டுகளை அகற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. அதற்கு உதவும்பொருட்டு அலையன்ஸ் குழுமம் எட்டு சாதனங்களை தானமாக வழங்கி உள்ளது. ஒவ்வொரு சாதனமும் மணிக்கு 4,000 சதுர மீட்டர் வரையிலான தரைப்பகுதியைச் சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது.

சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக நன்கொடை முயற்சி கைகூடியது. சாதனங்களை தானமாக வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு நகரில் நடந்தேறியது. சாதனங்கள் அனைத்தும் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டவை.

இந்த நன்கொடை இலங்கை கடல்துறை சுற்றுச்சூழலை மீட்டெடுக்க உதவும் என்று தாம் நம்புவதாகக் குழுமத்தின் தலைவர் ஜேக்கப் டுவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்