தொழில்நுட்பக் கல்விக்கழகத்துக்கு புதிய தலைவர் நியமனம்
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் மூன்றாவது தலைவராக பேராசிரியர் சுவா கீ சைங் நியமிக்கப்பட்டு
உள்ளார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்த பேராசிரியர் டான் தியாம் சூன் விலகிச் செல்வதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் திரு சுவா அந்தப் பொறுப்பை ஏற்பார் என்று கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 2019 செப்டம்பரில் கழகத்துடன் இணைந்த பேராசிரியர் சுவா தற்போது துணைத் தலைவர் (அகாடெமிக்) பதவியில் உள்ளார். பயனுறு கற்றல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளை மேம்படுத்திய பெருமை இவருக்கு உண்டு என்றது அறிக்கை.
பள்ளிச்சிறுமிகளைத் தேடிச் சென்று ஆபாசப் படம் எடுத்த இளையர்
ஒல்லியான தேகமுடைய பள்ளிச் சிறுமிகளைத் தேடிச் சென்று அவர்களின் பாவாடைக்குள் படம் எடுத்து வந்த குற்றத்தை 16 வயது இளையர் ஒப்புக்கொண்டுள்ளார். மலேசிய நிரந்தரவாசியான அந்த இளையரைப் பற்றிய விவரங்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விவரங்களும் அவர்
களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு வெளியிடப்படவில்லை. 2019ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பள்ளிச்சிறுமிகளை ஆபாசமாக அந்த இளையர் படமெடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுள் ஒருவர் தொடக்கப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் தோற்றத்தைப் பார்த்து மகிழும் மூன்றுவிதக் குற்றங்களை இளையர் ஒப்புக்கொண்டார். பாவாடைக்குள் எடுக்கப்பட்ட படங்களை சேமித்து அவற்றை மற்றவர் பார்க்க இயலா வண்ணம் மறைச்சொற்களால் பாதுகாத்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து நிறுத்தங்களிலும் எம்ஆர்டி நிலையங்களிலும் பள்ளிச் சீருடையில் மாணவிகள் தென்பட்டால் அவர்
களின் அருகில் சென்று ஆபாசப் படம் எடுத்து வந்ததாக புகார் வந்ததும் போலிசார் விசாரணையில் இறங்கினர்.
ஆபாசப் படமெடுக்க அவர் பயன்படுத்திய கைபேசி பறிக்கப்பட்டபோதிலும் மேலும் இரு கைபேசிகளிலும் அந்தப் படங்கள் இருந்தன. மூன்று கைபேசிகளிலும் 58 ஆபாசப் படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மனரீதியாகப் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய மனநல சுகாதாரக் கழக அதிகாரிகள் அந்த இளையரைப் பரிசோதித்தனர். ஆனால் அவர் எவ்வித மனக்கோளாற்றாலும் பாதிக்கப்படவில்லை என பரிசோதனைக்குப் பின் தெரிய வந்தது. அடுத்த மாதம் 9ஆம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி
சிங்கப்பூர் ஆயுதப் படை பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சியை மரினா பேயில் நடத்தி உள்ளது. திங்கட்கிழமை இரவு சிறப்பு செயலாக்கப் படை வீரர்களை கட்டடம் ஒன்றின் வெளிப்பகுதியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் சூப்பர் பூமா ஹெலிகாப்டர்கள் இறக்குவது திறம்பட செய்து காட்டப்பட்டது. ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய வீரர்கள் கட்டடத்திற்குள் புகுந்து அங்கு பணய மாக வைக்கப்பட்டவர்களை, மிரட்டல்களுக்கு இடையே சாதுர்யமாக மீட்கும் பாவனைப் பயிற்சி இடம்பெற்றது. பயங்கரவாதம், அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் போது அவற்றை முறியடிக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் பயிற்சி நடத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது. முதல்முறையாக எஃப்1 கார் பந்தய கட்டடத்தில் பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. திங்கட்கிழமை தொடங்கிய பயிற்சி நேற்றுக் காலை வரை நீடித்தது. பயிற்சிக்காக அந்த மூன்று மாடிக் கட்டடம் தடுப்புகளால் சுற்றி வளைக்கப்பட்டு பொதுமக்கள் அவ்விடத்தை நெருங்காமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டனர்.
மியன்மார் மனிதாபிமான உதவிக்கு சிங்கப்பூர் $135,000 பங்களிக்கும்
மியன்மாருக்கான மனிதாபிமான உதவிக்கு சிங்கப்பூர் S$135,000 மதிப்புள்ள பங்களிப்பை செய்யும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். ஆசியான் வட்டார வெளியுறவு அமைச்சர் களை இணையம் வழியாகச் சந்தித்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். "மியன்மார் நிலவரம் தொடர்ந்து பெருங்கவலைக்குரியதாக உள்ளது. அதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆசியான் தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐந்து அம்ச கருத்திணக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவ சியத்தை நாங்கள் அப்போது வலியுறுத்தினோம்," என்று திரு விவியன் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் நாடுகள் தங்களது மக்களுக்கு தடுப்பூசி வாங்கும் வகையில் கொவிட்-19 சமாளிப்பு நிதியை ஒருங்கிணைந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

