விரைவில் முன்பதிவின்றி ஃபைசர் தடுப்பூசியை பெறலாம்

1 mins read
32d80ab3-8663-443c-af4f-97708aebbea6
-

அனைத்து சிங்கப்பூரர்களும் முன்பதிவின்றி ஃபைசர் -பயோடெக்/கொமிர்நாட்டி தடுப்பூசிகளை வழங்கும் தடுப்பூசி நிலையங்களுக்கும் பலதுறை மருந்தகங்களுக்கும் முன்பதிவின்றி நேரடியாகச் சென்று தடுப்பூசிப் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சுகாதார அமைச்சின் நெருக்கடிநிலை உத்திபூர்வ, நடவடிக்கைக் குழுமத்தின் இயக்குநர் திரு தினேஷ் வாசு டேஷ் நேற்று அதனைத் தெரிவித்தார். சிங்கப்பூர் சுகாதாரப்பராமரிப்பு நிர்வாகக் காங்கிரசில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மொடர்னா தடுப்பூசியை வழங்கும் 11 சமூகத் தடுப்பூசி நிலையங்களுக்கு முன்பதிவு செய்யாமல் நேரடியாகச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தது.

பதினெட்டு வயதுள்ளவர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதியில் தங்கியிருப்பவர்களுக்கு அது பொருந்தும்.

சரியான நேரம் வரும்போது ஃபைசர் தடுப்பூசிக்கும் அத்திட்டம் நீட்டிக்கப்படும் என்று திரு தினேஷ் சொன்னார். சிங்கப்பூரில் 26 நிலையங்களில் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த மாதத் தொடக்கத்தில் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டுக்குத் தடுப்பூசி போடுவது சிங்கப்பூரின் திட்டம் என்றும் அது சமூகத்தில் பெரும்பான்மையினருக்குத் தடுப்பாற்றல் இருக்கும் நிலையை எட்ட சிங்கப்பூருக்கு உதவும் என்றும் திரு தினேஷ் தெரிவித்தார்.

குறுகியகால அனுமதியில் இங்கு இருக்கும் வெளிநாட்டவர், குறிப்பாக தங்கள் குடும்பத்தாரைக் காண இங்கு வந்து சொந்தநாடு திரும்ப முடியாத வயதான பெற்றோர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது அடுத்த கட்டம் என்றார் திரு தினேஷ்.