அதிவிரைவாக வளர்ச்சி காணும் தொழில்துறைகளுக்கு ஏற்ற சரியான திறன்களை உடைய போதுமான பட்டதாரிகளை உருவாக்குவதே பல நாடுகள் இன்று சந்திக்கும் சவால் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
இணையப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளுடன் தகுதி அடிப்படையிலான வேலையிடக் கற்றல் பாதையை உருவாக்குவது தொடர்பில் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி) நேற்று இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டபோது அமைச்சர் சான் இவ்வாறு பேசியிருந்தார்.
ஊழியர்கள் தங்கள் வேலை தொடர்பில் புதிய கல்வியறிவையும் திறன்களையும் பெறுவதுடன் பல்கலைக்கழகப் பட்டத்தையும் பெறலாம்.
இந்த மாற்றுக் கல்விப் பாதையை எஸ்ஐடி வழங்குவதன் மூலம் முன்னாள் வேலை அனுபவத்தின்போது ஊழியர்கள் பெற்ற தகுதிசார்ந்த திறன்கள், அவர்களுக்குப் பட்டம் பெறுவதற்கான மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றுத் தரும்.
குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் துறைகளாக இணையப் பாதுகாப்பும் போக்குவரத்தும் எதிர்பார்க்கப்படுவதால் இம்முன்னோட்டத் திட்டத்திற்கு இத்துறைகள் முதலில் தேர்வாகியுள்ளன.
இரு துறைகளைச் சார்ந்த பங்காளிகளுடன் எஸ்ஐடி நேற்று ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் இரண்டு ஊழியர் அணிகளும் திறன் மேம்பாட்டில் ஈடுபடுவதை பல்கலைக்கழகம் உறுதிசெய்யும்.
இக்கல்வித் திட்டத்திற்கான கற்பித்தல் முறை, பெரியவர்களுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும் என்றார் திரு சான்.
குடும்பம், நிதி தொடர்பாக வேலை செய்வோருக்குப் பல கடமைகள் இருக்கக்கூடும். என்றாலும் அவற்றுக்கிடையே வாழ்நாள் கல்வி மேற்கொள்ளும் பழக்கத்தையும் வேலை செய்யும் பெரியவர்கள் ஏற்படுத்திக்கொள்வது அவசியம் என்றார் அவர்.