சிங்கப்பூரில் 'எஸ்ஜிசெக்யூர்' (SGSecure), 'மைரெஸ்போன்டர்' (MyResponder) செயலிகள் மூலம் மருத்துவ உதவி தேவைப்படுவோர் அல்லது தீச்சம்பவங்களில் சிக்கியோர் பற்றி அறிந்து அவர்களுக்கு உதவ, 3,000க்கும் மேற்பட்டோர் முன்வந்தனர் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நவம்பர் 2019 முதல் இவ்வாண்டு மே வரை பதிவான எண்ணிக்கை இது என்று கூறப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிராக 2016ல் 'எஸ்ஜிசெக்யூர்' திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. முதலுதவி வழங்குதலையும் இதர நெருக்கடி காலத் திறன்களை அறிந்திருத்தலை மக்களிடையே ஊக்குவிப்பது இதன் நோக்கம். இத்தகைய திட்டத்தின்கீழ் இணையும் பொதுமக்கள், தங்கள் அருகே 400 மீட்டர் தொலைவுக்குள் ஏற்படும் ஒரு நெருக்கடிச் சூழல் குறித்து செயலிகள் வழி அறிந்திடுவர். பின்னர் வரைபடம் கொண்டு நெருக்கடி எங்கு நிகழ்ந்துள்ளது என்பதையும் செயலி காட்டும்.
இந்நிலையில், பதிவுசெய்துகொண்டோருக்கு 6,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் குறித்த தகவல்கள், செயலிகள் மூலம் அனுப்பப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. 'மைரெஸ்போன்டர்' செயலியை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நிர்வகித்து வருகிறது.
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவது முதல் தீவிரம் அல்லாத தீச்சம்பவம் நிகழ்வது வரை செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். நெருக்கடி குறித்துத் தகவல் பெற, ஒருவர் தம் கைபேசியில் இரு செயலிகளையும் இயக்கவோ அவற்றைத் திறந்து வைத்திருக்கவோ தேவையில்லை என்றும் கூறப்பட்டது.
தகவலைப் பெறக்கூடிய கைபேசி, இணைய வசதி, இருக்கும் இடத்தைச் செயலிகள் அறிந்திட அனுமதி வழங்கி இருத்தல் ஆகியவை உதவிக்கரம் நீட்ட விரும்புவோருக்கு இருக்க வேண்டும் என்றது அமைச்சு.