புதிய தடை நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் கூட்டம் குறைந்துவிட்டதை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர்கள் கண்டனர். குறிப்பாக, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை ஆகியவற்றில் வார்டுகளுக்குப் பதிவு செய்ய ஒருசிலர் காத்திருந்ததை அவர்கள் காண நேரிட்டது.
சில மருத்துவமனைகளில் கூட்டம் காணப்பட்டபோதிலும் அவர்கள் வெளிநோயாளி சிகிச்சைக்காக வந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது. மருத்துவமனைகளில் கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதைத் தொடர்ந்து இன்று முதல் வருகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. வரும் 18ஆம் தேதி வரை இத்தடை நடப்பில் இருக்கும்.
இது குறித்து நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தெரிவித்துவிட்டதாக டான் டோக் செங் மருத்துவமனை பேச்சாளர் இன்று கூறினார்.
புதிய விதிமுறையை வருகையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை அறிவிப்புகளை ஒட்டி இருந்தது. மேலும் அதன் ஒவ்வொரு நுழைவாயில் பகுதியிலும் மருத்துவமனை ஊழியர் நிறுத்தப்பட்டு, அங்கு வருவோருக்கு தடை குறித்து விளக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாங்கி பொது மருத்துவமனையிலும் ஈசூன் சமூக மருத்துவமனையிலும் நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றுக் குழுமம் உருவானதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்குத் தடைவிதிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், கூடுதல் பராமரிப்பாளர் தேவைப்படும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அவ்வாறு வருபவர்கள் நோயாளியுடன் 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஈசூன் சமூக மருத்துவமனையில் நான்கு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தொற்றுக் குழுமம் உருவானதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
பெரும்பாலும் 60 வயதைக் கடந்த 32 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த வார்டில் அந்தக் குழுமம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை சாங்கி பொது மருத்துவமனையில் மூவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு புதிய தொற்றுக் குழுமம் உருவெடுத்தது. 20 பேர் அடங் கிய மற்றொரு குழுமம் மூடப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு அங்கு புதிய குழுமம் உருவானது.

