சிங்கப்பூரில் பொது வீடமைப்பு எல்லாரையும் உள்ளடக்கியதாக, எல்லாருக்கும் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதால் அது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தேவை சிங்கப்பூருக்கு இருக்கிறது என்று இரண்டாவது தேசிய வளர்ச்சி அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வருவாய் ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கும் நிலையில் வீட்டுச்சந்தை இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தச் சிந்தனை அவசியமாகிறது என்று அமைச்சர் விளக்கினார்.
அக்கம்பக்கங்கள் தொடர்ந்து பன்மயமாக இருப்பதை உறுதிப்படுத்த இன ஒருங்கிணைப்புக் கொள்கை முக்கியம் என்பதையும் அவர் சுட்டினார்.
ஹுட்டன்ஸ் வருடாந்திர பேர வையில் நிலச்சொத்து முகவர்களிடையே நேற்று உரையாற்றிய குமாரி இந்திராணி, பிரதான இடங்களில் பொதுக் குடியிருப்புகள் கட்டப்படும்போது வருவாய் ஏற்றத்தாழ்வும் வீடமைப்பில் அதன் தாக்கமும் இன்னும் முக்கியமான அம்சமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
"பொருளியல் மேம்படும் நிலையில், சமூகப் பொருளியல் அந்தஸ்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பேட்டைகளில் மக்கள் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வலுவான பொருளியல் சமூக சக்திகள் காரணமாக இருந்து வந்துள்ளதை நாம் பார்த்து வந்திருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
முக்கியமான இடங்களில் உருவாக்கப்படும் பொதுக் குடியிருப்புப் பேட்டைகள் காலப்போக்கில் எல்லாரையும் உள்ளடக்கியதாகவே தொடர்ந்து இருந்து வரும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் குமாரி இந்திராணி தெரிவித்தார்.
இதற்குப் பிரதான இடங்களில் புதிய பாணி வீடமைப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு மட்டுமின்றி பிறகு மறுவிற்பனை வீடுகளை வாங்குவோருக்கும் அத்தகைய வீடுகள் எட்டும் நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் நிச்சயமில்லாத பொருளியல் சூழ்நிலையைக் கருத்தில்கொள்ள வேண்டும். விவேகமான நிதி முடிவுகளைச் செய்து அவர்கள் சொத்துகளை வாங்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
சொத்துச் சந்தை சுறுசுறுப்பாக இருக்கிறது என்றாலும் சொத்து விலை உயர்வுகள் கட்டிக்காக்கப்பட வேண்டிய நிலையில் இருந்து வரவேண்டும் என்பதே சிங்கப்பூரின் நோக்கமாக இருந்து வந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பல சிங்கப்பூரர்களை பொறுத்தவரை வீட்டை வாங்குவது என்பது அவர்கள் செய்யும் தனித்த ஆகப் பெரிய கொள்முதலாக இருக்கும். வீடு வாங்கும் ஒருவர் அதற்கான கடனை அடைக்க முடியாமல் போனால் அதனால் ஏற்படக்கூடிய நிதி மற்றும் சமூகத் தாக்கங்கள் கணிசமாக இருக்கும் என்பதை அமைச்சர் சுட்டினார்.

