வீவக மறுவிற்பனை விலை தொடர்ந்து உயர்வு

2 mins read
565694f0-ec95-4645-a53d-e8eb64228548
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக மறு­விற்­பனை வீடு­க­ளுக்­கான தேவை ஜூலை மாதம் தொடர்ந்து வலு­வாக இருந்­தது. விலை­கள் தொடர்ந்து கூடின.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­கள் இருந்­தா­லும்­கூட கைமா­றிய வீடு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­கி­யது. வீவக மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை தொடர்ந்து 13வது மாத­மாக ஜூலை மாதம் கூடி­யது. எஸ்­ஆர்­எக்ஸ் நிலச் சொத்து இணை­ய­வா­யில் மூலம் இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்­தன.

விலை­கள் கூடி­னா­லும் விலை அதி­க­ரிப்பு வேகம் இரண்­டா­வது மாத­மாக கொஞ்­சம் மெது­வாகவே இருந்­தது. ஆண்­டு அடிப்­படை­யில் பார்க்­கை­யில் மறு­விற்­பனை விலை சென்ற ஆண்டு ஜூலை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு ஜூலை­யில் 13.2% கூடி­யது. சென்ற மாதம் இடம்­பெற்ற விலை அதி­க­ரிப்பு பரந்த அடிப்­படை­யில் காணப்­பட்­டது.

முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்­சி அடை­யாத குடி­யி­ருப்புப் பேட்­டை­களில் உள்ள மறு­விற்­பனை வீடு­களின் விலை­கள் அதி­க­ரித்­தன.

ஏறத்­தாழ அனைத்து வகை வீடு­க­ளின் விலை­களும் உயர்ந்­தன. எக்­சி­கி­யூட்­டிவ் அடுக்­கு­மாடி வீடு­களின் விலை மட்­டும் 0.6% குறைந்­தது. சென்ற மாதம் மொத்­தம் 2,662 மறு­விற்­பனை வீடு­கள் கைமா­றின. இது ஜூன் மாத அள­வை­விட 15.2% அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கொரோனா கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்த போதி­லும் விற்­கப்­பட்ட வீவக மறு­விற்­பனை வீடு­களின் எண்­ணிக்கை கடந்த நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அளவை ஜூலை­யில் எட்­டி­யது என்று இஆர்ஏ ரியல்டி என்ற நிறு­வனத்­தின் ஆய்வு ஆலோ­ச­னைப் பிரி­வின் தலை­வர் நிக்­கோ­லஸ் மாக் தெரி­வித்­தார்.

புதிய வீடு­களை வாங்க அதிக காலம் காத்­தி­ருக்க நேரி­ட­லாம் என்ற எதிர்­பார்ப்­பில் பல­ரும் மறு­விற்­பனை வீடு­களை வாங்க விரும்பு­கி­றார்­கள் என்­ப­தையே இந்த நில­வ­ரம் காட்­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்நிலை­யில், ஹுட்­டன்ஸ் ஆசியா நிறு­வ­னத்­தின் ஆய்­வுப் பிரி­வின் மூத்த இயக்­கு­நர் லீ ட்ஸி டெக், சென்ற மாதம் கைமா­றிய வீடு­களில் 45க்கும் அதிக ஆண்டு கள் பழ­மை­யான வீடு­க­ளின் விகிதம் ஓராண்­டுக்கு முன் இதே மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் ஏறத்­தாழ 51 விழுக்­காடு அதி­க­மாக இருந்­தது என்று தெரி­வித்­தார்.

சென்ற மாதம் கைமா­றிய மறு­விற்­பனை வீடு­களில் 19 வீடு­கள் ஒவ்­வொன்­றும் குறைந்­த­பட்­சம் $1 மில்­லி­யன் விலைக்கு விற்­கப்­பட்­டன. தி பின்­னக்­கள்@டக்ஸ்­டன் திட்ட ஐந்­தறை வீடு சென்ற மாதம் சாதனை அள­வ­ாக $1.225 மில்­லி­யன் விலைக்கு கைமா­றி­யது.

ஜூலை­யில் நடந்த மொத்த மறு­விற்­பனைகளில் 0.7% வீடு­கள் மில்­லி­யன் வெள்ளி வீடு­க­ளாக இருந்­தன. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தம் 125 வீடுகள் குறைந்தபட்சம் தலா $1 மில்லியன் விலை கொடுத்து வாங்கப்பட்டு உள்ளன.