வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை ஜூலை மாதம் தொடர்ந்து வலுவாக இருந்தது. விலைகள் தொடர்ந்து கூடின.
கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் இருந்தாலும்கூட கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகியது. வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து 13வது மாதமாக ஜூலை மாதம் கூடியது. எஸ்ஆர்எக்ஸ் நிலச் சொத்து இணையவாயில் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவந்தன.
விலைகள் கூடினாலும் விலை அதிகரிப்பு வேகம் இரண்டாவது மாதமாக கொஞ்சம் மெதுவாகவே இருந்தது. ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் மறுவிற்பனை விலை சென்ற ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலையில் 13.2% கூடியது. சென்ற மாதம் இடம்பெற்ற விலை அதிகரிப்பு பரந்த அடிப்படையில் காணப்பட்டது.
முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள மறுவிற்பனை வீடுகளின் விலைகள் அதிகரித்தன.
ஏறத்தாழ அனைத்து வகை வீடுகளின் விலைகளும் உயர்ந்தன. எக்சிகியூட்டிவ் அடுக்குமாடி வீடுகளின் விலை மட்டும் 0.6% குறைந்தது. சென்ற மாதம் மொத்தம் 2,662 மறுவிற்பனை வீடுகள் கைமாறின. இது ஜூன் மாத அளவைவிட 15.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்த போதிலும் விற்கப்பட்ட வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவை ஜூலையில் எட்டியது என்று இஆர்ஏ ரியல்டி என்ற நிறுவனத்தின் ஆய்வு ஆலோசனைப் பிரிவின் தலைவர் நிக்கோலஸ் மாக் தெரிவித்தார்.
புதிய வீடுகளை வாங்க அதிக காலம் காத்திருக்க நேரிடலாம் என்ற எதிர்பார்ப்பில் பலரும் மறுவிற்பனை வீடுகளை வாங்க விரும்புகிறார்கள் என்பதையே இந்த நிலவரம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஹுட்டன்ஸ் ஆசியா நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் லீ ட்ஸி டெக், சென்ற மாதம் கைமாறிய வீடுகளில் 45க்கும் அதிக ஆண்டு கள் பழமையான வீடுகளின் விகிதம் ஓராண்டுக்கு முன் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ 51 விழுக்காடு அதிகமாக இருந்தது என்று தெரிவித்தார்.
சென்ற மாதம் கைமாறிய மறுவிற்பனை வீடுகளில் 19 வீடுகள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் $1 மில்லியன் விலைக்கு விற்கப்பட்டன. தி பின்னக்கள்@டக்ஸ்டன் திட்ட ஐந்தறை வீடு சென்ற மாதம் சாதனை அளவாக $1.225 மில்லியன் விலைக்கு கைமாறியது.
ஜூலையில் நடந்த மொத்த மறுவிற்பனைகளில் 0.7% வீடுகள் மில்லியன் வெள்ளி வீடுகளாக இருந்தன. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தம் 125 வீடுகள் குறைந்தபட்சம் தலா $1 மில்லியன் விலை கொடுத்து வாங்கப்பட்டு உள்ளன.

