ஆய்வாளராகப் பணியாற்றிய பள்ளி ஊழியர் ஒருவரும் மாணவர்கள் இருவரும் இவ்வாண்டின் முற்பாதியில் பாலியல் ரீதியான தவறான நடத்தைக்குப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) அதன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் என்யுஎசில் தவறான பாலியல் நடத்தை தொடர்பில் கிடைத்த புகார்கள் குறித்த விவரங்களைக் கொண்டிருந்தது அறிக்கை. பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளைப் பேசியதாக ஆய்வாளர் மீது புகார் தரப்பட்டது. அத்துடன் இரண்டு மாணவர்களுக்குத் தகாத காணொளிகளையும் அனுப்பி அவ்விருவரில் ஒருவரை அனுமதி இன்றித் தொட்டும் இருந்தார் அந்த ஆய்வாளர். ஆய்வாளரின் நடத்தை குறித்து கடந்த மார்ச் மாதம் புகார் அளிக்கப்பட்டதாக என்யுஎஸ் குறிப்பிட்டிருந்தது. அத்துடன் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளியேற்றப்பட்ட மாணவர்களில் ஒருவர், இன்னொரு மாணவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறப்பட்டது.
அனுமதியின்றி ஒரு மாணவரைத் தொட்டது, மற்றொரு மாணவரின் நிர்வாணக் காணொளியைப் பதிவிட்டது ஆகிய புகார்கள் தொடர்பில் மற்றொரு மாணவர் வெளியேற்றப்பட்டார்.
மாணவர்கள் தொடர்பில் மேலும் எட்டு பாலியல் நடத்தைச் சம்பவங்கள் உள்ளன. இந்நிலையில், தவறு செய்யும் மாணவர்களுக்கு எதிராக புகார் அளிக்க மேலும் அதிக மாணவர்கள் முன்வரத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

