கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, சிங்கப்பூரின் மருத்துவ நிலையங்களில் மொத்தம் 16 ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
காலஅட்டவணை படியான, வழக்கமான பரிசோதனைகளின்போதும் தொற்று அறிகுறி உள்ள ஊழியர்கள் மருத்துவரைச் சென்று பார்த்தபோதும் அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சில் மருத்துவச் சேவைகள் இயக்குநர் டாக்டர் கென்னத் மாக் நேற்று கூறினார். கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
ஈசூன் சமூக மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை ஆகியவற்றில் இந்த வாரம் ஏற்பட்ட தொற்றுக் குழுமங்களில் மொத்தம் ஏழு பேருக்குத் தொற்று. முந்தைய வாரத்தில், சாங்கி மருத்துவமனையில் 20 பேர் கொண்ட தொற்றுக் குழுமத்தில் இருந்தோர் குணமடைந்து குழுமம் மூடப்பட்டது.
மருத்துமனை ஊழியர்கள் அனைவரும் பொருத்தமான தனிப்பட்டப் பாதுகாப்பு ஆடைகளை அணிந்திருந்ததாக டாக்டர் மாக் குறிப்பிட்டார். தொற்று ஏற்பட்ட ஊழியர்களின் வழி நோயாளிகளுக்குத் தொற்று பரவியதாக சான்று ஏதும் இல்லை.
தொற்று ஏற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சேர்ந்தபோது பரிசோதனைகளில் தொற்றில்லை என்று காட்டியபோதும், அவர்களுக்குள் கிருமி சிறிதாக வளர்ந்து கொண்டிருக்கலாம் என்று டாக்டர் மாக் கூறினார்.

