சென்ற ஆண்டு முற்பாதியில் பதிவானதைக் காட்டிலும் இந்த ஆண்டின் முற்பாதியில் பயனீட்டாளர்களிடமிருந்து வந்த புகார்களின் எண்ணிக்கை குறைந்ததாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு மக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டதே அதற்குக் காரணம்.
இந்த ஆண்டு முற்பாதியில் 7,260 புகார்கள் வந்ததாகப் பயனீட்டாளர் சங்கம் கூறியது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது 19.5 விழுக்காடு குறைவு.
பயண, சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் கணிசமாகக் குறைந்தன.
சென்ற ஆண்டு முற்பாதியில் இந்த நிறுவனங்களுக்கு எதிராகத்தான் ஆக அதிகமான புகார்கள் கொடுக்கப்பட்டன.
உதாரணமாக, பயணத் துறை நிறுவனங்களுக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கை 1,138லிருந்து 406ஆகக் குறைந்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடாதது இதற்குக் காரணமாக இருக்கும் எனச் சங்கம் கூறியது.

