வீ. பழனிச்சாமி
இணை ஆசிரியர்
இவ்வாண்டுக்கான தேசிய தின விருதுப் பட்டியலில் முதல் இடத்தைப் பெறுகிறார் டிபிஎஸ் வங்கிக் குழுமம், லாசால் கலைக் கல்லூரி, தேசிய சம்பள மன்றம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் தலைவரும் அதிபர் ஆலோசனை மன்றத்தின் உறுப்பினருமான 74 வயது திரு பீட்டர் சியா லிம் ஹுவாட்.
திரு சியாவுக்கு நாட்டின் உயரிய 'நீல உத்தமா' (உச்ச தகுதி) விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிலையில் மேன்மைதங்கிய சேவை விருது பெறுகின்றனர் தேசிய பூங்காக் கழகத்தின் தலைவர் திரு பென்னி லிம் சியாங் ஹோ, பொதுப் போக்குவரத்து மன்றத்தின் தலைவர் திரு ரிச்சர்ட் மெக்னஸ் ஆகியோர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர்களில் ஒருவராகக் கௌரவிக்கப்பட்ட பாஸ்கர் கலைக் கழகத்தின் கலை இயக்குநரும் சிங்கப்பூரின் பழம்பெரும் கலைஞர்களில் ஒருவருமான 81 வயது திருமதி சாந்தா பாஸ்கருக்கு மெச்சத்தக்க சேவைப் பதக்கம் வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஆயுதப்படையில் தற்காப்புப் படைத் தலைவரான 46 வயது லெஃப்டினென்ட் ஜெனரல் மெல்வின் ஓங், ராணுவத்துக்கான மெச்சத்தக்க சேவைப் பதக்கத்தைப் பெறுகிறார்.
அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தின விருது பற்றி கருத்துரைத்த திருமதி சாந்தா பாஸ்கர், "இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்த விருது கிடைத்திருப்பது, பாரம்பரிய கலைகளுக்கு, குறிப்பாக நடனத்துக்கு சிங்கப்பூரில் தொடர்ந்து அங்கீகாரம் அளிக்கப்படுவதைக் காட்டுகிறது," என்றார்.
சிங்கப்பூரின் கலாசாரப் பதக்கத்தை 1990ஆம் ஆண்டில் பெற்ற திருமதி சாந்தாவுக்கு, 2016ல் பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் வழங்கப்பட்டது.
தெம்பனிஸ் சென்ட்ரல் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் திரு ஜி. சேகர், பொங்கோல் வெஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் திரு ஹாஜா நிஜாமுதீன், மக்கள் கழக நற்பணிப் பேரவையின் துணைத் தலைவர் திருவாட்டி என். குமாரி தேவி, மேக்ஸ்வெல் சேம்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு பிலிப் ஆண்டனி ஜெயரத்னம் ஆகியோர் பொதுச் சேவை நட்சத்திரப் பதக்கம் பெறுபவர்களில் சிலர்.
"தன்னலமற்று அயராது சமூகத்திற்குச் சேவையாற்றிடும், சிங்கப்பூரை சிறந்த இடமாக உருவாக்கிட தொடர்ந்து பாடுபடும் அனைவருக்கும் இந்த விருது ஓர் ஊக்கமாய் இருக்கும் என நம்புகிறேன்," என்றார் திரு நிஜாமுதீன்.
தமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பொது நிர்வாக வெண்கலப் பதக்கம் பற்றி பேசிய உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தின் இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன், "சுமார் 30 ஆண்டுகளாகக் கல்வித்துறையில் பணியாற்றிவரும் எனக்கு உற்ற துணையாக இருந்து எனது பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு ஆதரவு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் இவ்விருதைச் சமர்ப்பிக்கிறேன்," என்றார்.
தேசிய கல்விக் கழகத்தில் மூத்த கற்பித்தல் ஆய்வாளரான திருவாட்டி குணவதி நல்லதம்பிக்கும் பொது நிர்வாக வெண்கலப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து கருத்துரைத்த திருவாட்டி குணவதி, "இது எனக்கு கிடைக்கும் இரண்டாவது தேசிய தின விருது. 2001ல் எனக்கு பாராட்டுப் பதக்கம் கிடைத்தது. வாழ்நாள் கல்வியும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் பண்பும் எனக்கு கைகொடுத்துள்ளது. மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தொடர்ந்து சேவையாற்றுவேன்," என்றார்.
தேசிய தின விருதை மொத்தம் 5,710 பேர் பெறுகின்றனர். அவர்களில் 702 பேர் சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள். செயல்திறன் விருது பெறும் 871 பேர், நீண்டகால சேவை விருது பெறும் 3,241 பேர் தவிர்த்த விருது பட்டியலில், 85 பேர் இந்தியர்கள்.

