ஒன்றுபட்ட மக்களாக சவால்களை முறியடித்து வெற்றி காண்போம் என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் 56வது தேசிய தினத்தையொட்டி நேற்றுக் காலை நடைபெற்ற அணிவகுப்பு குறித்து அவர் தமது ஃபேஸ்புக்கில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அவர் தமது பதிவில், "வழக்கமாக உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கும் தேசிய தின அணிவகுப்பிலிருந்து இவ்வாண்டின் அணிவகுப்பு வேறுபட்டிருந்தாலும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் வானில் தேசிய கொடி நம்மைக் கடந்துசென்ற கம்பீரமும் எஃப்-15 போர் விமானங்
களின் இடிமுழக்க வீர வணக்கமும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தின," என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "சடங்குபூர்வ அணி
வகுப்பைக் காண மரினா பே மிதக்கும் மேடைக்கு நேரில் வந்தோரும் வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்தோரும் இவற்றைக் கண்டு பரவச
மடைந்திருப்பர்.
"நேரில் வந்தோரில் கொவிட்-19 முன்களப் பணியாளர்களும் அத்தியாவசிய ஊழியர்களும் அடங்குவர்.
"சிங்கப்பூருக்கு வீரவணக்கம் செலுத்த தேசிய கொடியுடன் பறந்து சென்ற சினூக் ஹெல்காப்டர்களை தீவு முழுவதும் உள்ள மக்கள் கண்டும் அவற்றின் ஓசையைக் கேட்டும் மகிழ்ந்திருப்பர்.
"சிறிய தேசமாக சிங்கப்பூர் இவ்வாண்டு சவால்களை எதிர்கொண்டபோதிலும் ஒன்றிணைந்த மக்களாக அவற்றை முறியடித்து வெற்றிகாண்போம்; எப்போதும் அதனையே தொடருவோம்," என்று தெரிவித்த பிரதமர், சிங்கப்பூருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் வாசகங்களையும் கருத்து களையும் தம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.