தலைநிமிர்ந்து பறந்த தேசிய கொடியைப் பார்த்த மக்கள்

2 mins read
04fe8222-c772-471e-8c23-e423bdcb386e
பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்தபடி மரினா அணைக் கட்டின் அருகே சுமார் 150 பேர் தேசிய கொடி பறப்பதைக் கண்டுமகிழ்ந்த பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிவப்பு வெள்ளை ஆடை அணிந்த சிங்­கப்­பூ­ரர்­கள் இவ்­வாண்டு தேசிய தின அணி வகுப்­பின்­போது தேசிய கொடி பறந்து செல்­வ­தைக் காண தீவு முழு­வ­தும் சிறு­சிறு குழுக்களா­கக் கூடி­னர்.

சினூக் ரக ஹெலி­காப்­டர்­களும் எஃப்-15எஸ்ஜி ரகப் போர்­வி­மா­னங்­களும் காலை சுமார் 9.50 மணிக்கு தீவின் பல பகு­தி­க­ளுக்­குப் பறந்­து­சென்­றன. இரண்டு அப்­பாச்சே ஹெலி­காப்­டர்­கள் உடன்­செல்ல சினூக் ரக ஹெலி­காப்­டர்­க­ளி­லி­ருந்து தேசிய கொடி பறந்­தது. ஒரே நேரத்­தில் இரண்டு பாதை­களில் அவை பறந்து சென்­றன.

ஓர் அணி மேற்கு திசை­யில் உள்ள வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங், சுவா சூ காங், புக்கிட் தீமா, புக்­கிட் பாஞ்­சாங் ஆகிய வட்­டா­ரங்­க­ளுக்­கும் மற்றோர் அணி கிழக்­கு­நோக்கி ஈஸ்ட் கோஸ்ட், சாங்கி, பாசிர் ரிஸ் பிடோக், பொங்­கோல், காத்­திப் ஆகிய வட்­டா­ரங்­களுக்­கும் சென்­றது. தோ பாயோ, உட்­லண்ட்ஸ், கிளி­மெண்டி போன்ற குடி­யி­ருப்­புப் பேட்டை களுக்கு சுமார் மணிக்கு 600 கிலோ­மீட்­டர் வேகத்­தில் பறந்து எஃப்-15எஸ்ஜி ரகப் போர்­விமா­னங்­கள் சாக­சம் புரிந்­தன.

குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உய­ர­மான அடுக்­கு­மாடி வீடு­களில் பொது­மக்­கள் ஆங்­காங்கே நின்று தேசிய கொடி பறந்­து­செல்­வ­தைப் பார்த்­த­னர். ஹெலி­காப்­டர்­களையும் சிறு­பிள்­ளை­கள் இடை­யூறு இல்­லா­மல் பார்ப்­ப­தற்­காக அவர் களைத் தங்­கள் தோள்­களில் சுமந்­த­னர் பெற்­றோர்.

ஸ்கை­வில்@டாவ்­சன் அடுக்கு­மாடிக் கட்­ட­டக் கூரை­யில் தமது மூன்று வயது மகன் ஆமீர் ஈஷா­னு­டன் நின்று விமா­னங்­கள் பறந்­து­செல்­வ­தைப் பார்த்­தார் 43 வயது ஆசி­ரி­யர் திரு சுல்­தான் ஷமீது.

என் முன்­னாள் மாண­வர் போர்­வி­மானி என்­ப­தால் கடந்த ஆண்டு அவ­ரது விமா­னம் பறந்து செல்­வ­தைப் பார்­க்க மகனை இங்கு அழைந்து வந்­தேன். இந்த ஆண்டு அதனை வழக்­க­மாக்­கிக் கொண்­டோம் என்­றார் அவர்.

நகர்ப்­ப­கு­தி­யில், மரினா அணைக்கட்டின் மேலே சுமார் 150 பேர் திரண்­ட­னர். ஆனால் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்க அவர்­கள் மறக்­க­வில்லை. அதே­போன்ற காட்சி­தான் பாடாங் திட­லைச் சுற்­றிய பகு­தி­யி­லும் காணப்­பட்­டது.