இனவாதத்தை எதிர்த்து எழுந்த பல்லினக் குரல்கள்

இனவாதத்தை எதிர்த்து எழுந்த பல்லினக் குரல்கள்

1 mins read
7898da22-e3ea-457a-9102-b0271931ae0b
படம்: சமூக ஊடகம் -

தேசிய திடல்தடப் போட்டி வீரரான திரூபன் தனராஜன் தேசிய தின பதாகையில் இடம்பெற்றதை அடுத்து, இனவாதக் கருத்துகளால் அவரும் அவரது குடும்பத்தாரும் தாக்கப்பட்டனர்.

திரூபனின் பூர்வீகம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, சிங்கப்பூரரான திரூபனுக்கு ஆதரவாக அவர் வசிக்கும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கலாசார, சமூக, இளையர்த்துறை துணை அமைச்சர் அல்வின் டானும் களமிறங்கி இனவாதக் கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.

இனவாதக் கருத்துகளைத் தெரிவிப்போருக்கு எதிராக திரூபனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பக்கபலமாக இருப்பதாக தெரிவித்து தியோங் பாரு குடியிருப்புப் பேட்டையைச் சேர்ந்த சில குடியிருப்பாளர்கள் திரூபனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 40க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

அதுமட்டுமல்லாது, கடந்த சனிக்கிழமையன்று அமைச்சர் இந்திராணி ராஜா திரூபனின் வீட்டிற்குச் சென்ற அவரையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்தார்.

திரூபனுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட இனவாதக் கருத்துகள் கீழ்தரமானவை என்றார் அவர். அவற்றை எதிர்த்து சிங்கப்பூரின் பல்லின மக்கள் குரல் கொடுத்திருப்பதை அமைச்சர் இந்திராணி சுட்டினார்.

தங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் திரூபன் நன்றி தெரிவித்தார்.

"பெரும்பான்மை இனத்தவராக இருந்தாலோ சிறுபான்மை இனத்தவராக இருந்தோலோ நம்மை ஒரு கட்டத்துக்குள் அடைக்க நினைப்பவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்க எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் அனைவரையும் ஊக்குவிக்கும்," என்று திரூபன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.