ஜங்ஷன் எய்ட், நெக்ஸ், பிளாஸா சிங்கப்பூரா போன்ற கடைத்தொகுதிகளில் உள்ள உணவுநிலையங்களில் நேற்று அமர்ந்து உண்ண விரும்பிய வாடிக்கையாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களா என்று சரிபார்த்த பின்னர்தான் அங்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்தக் கடைத் தொகுதி உணவு நிலையங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அடையாளம் கண்டு அனுமதிக்க அவர்களுக்கு ஒட்டுவில்லை வழங்கப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் ஒட்டுவில்லை இல்லாதவர்களும் நிலையங்களில் அனு மதிக்கப்படவில்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உணவகங்கள், உணவு நிலையங்கள், உணவங்காடி நிலையங்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்ற விதிமுறை நேற்று நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து உணவு நிலையங்களில் சரிபார்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்காக உணவு நிலையங் களின் வாசல்களில் ஊழியர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காலையில் புதிய விதிமுறைகள் குறித்த குழப்பம் நிலவியதாகவும், முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாதவர்களும் இருந்த சில குழுக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் சில உணவு நிலையங்களின் ஊழியர்களும் அங்கு சென்ற வாடிக்கையாளர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினர்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டாலும் இரண்டு பேர் சேர்ந்து உண்ணலாம் என்று வாடிக்கையாளர்கள் சிலர் நினைத்தாக நெக்ஸ் கடைத்தொகுதி உணவு நிலைய ஊழியர் ஒருவர் கூறினார். ஆனால் அது உணவங்காடி நிலையங்களுக்கும் காப்பி கடைகளுக்கும் மட்டுமே பொருந்தும் என்றும் கட்டடங்கள் உள்ளிருக்கும் உணவு நிலையங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களே அமர்ந்து உண்ணலாம் என்று விளக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார். ஆனால் நேரம் செல்லச்செல்ல வாடிக்கையாளர்களுக்கு விதிமுறைகளில் தெளிவு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
ஜெம் போன்ற கடைத்தொகுதிகளில் நிலையங்களின் முகப்பில் சரிபார்த்தல் நடைபெறவில்லை. அந்தந்தக் கடையினரே சரிபார்த்தலில் ஈடுபட்டனர்.