அங் மோ கியோவில் 11 பூனைகளை கத்தியால் காயப்படுத்திய ஆடவர் ஒருவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடுமையாகக் காயமடைந்த அந்தப் பூனைகள் உயிர் பிழைத்திருந்தாலும் இவ்வளவு குரூரமான செயலைச் செய்தவருக்கு இந்த தண்டனை போதாது என விலங்குப் பிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்க மேலும் கடுமையான தண்டனை தேவைப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து கூறிய தேணுகா விஜய்குமார், "11 பூனைகள் கடுமையாகக் காயமடைந்துள்ளன. பராமரிப்பாளருக்கு இதனால் ஏராளமான செலவுகள். இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 18 மாத சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருக்கலாம். அந்தக் குற்றவாளி பேனாக் கத்தியை வாங்கத் திட்டமிட்டு பூனைகளை வேண்டுமென்றே வேட்டையாடச் சென்றவர்," என்று அவர் கூறினார்.
ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டட 37 வயது லியாவ் வெய் லியாங் மீது, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 18 மாதம் வரையிலான சிறைத்தண்டனையுடன் 15,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம். லியாவ், மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

