இம்மாதம் விற்பனைக்கு விடப்பட்டுள்ள 4,989 பிடிஓ வீடுகளில் பாதிக்கு மேற்பட்டவை முதிர்ச்சியான பேட்டைகளைச் சேர்ந்தவை. இதற்கு முன்னர் பிப்ரவரி, மே மாதங்களில் தொடங்கப்பட்ட பிடிஓ விற்பனை நடவடிக்கைகளில் பல வீடுகள் முதிர்ச்சியற்ற வட்டாரங்களில் இடம்பெற்று இருந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நான்கு பிடிஓ திட்டங்களில் 3,085 வீடுகள் குவீன்ஸ்டவுன், காலாங்/வாம்போ, தெம்பனிஸ் வட்டாரங்களுக்கு உரியவை.
எஞ்சிய 1,904 வீடுகள் ஜூரோங் ஈஸ்ட், ஹவ்காங் ஆகிய முதிர்ச்சியற்ற பேட்டைகளில் உள்ளன. இருப்பினும் இனிமேல் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்பட உள்ள பிடிஓ திட்டங்களில் ஒரே ஒரு திட்டம் மட்டுமே முதிர்ச்சியான பேட்டையில் அமையும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலாங்/வாம்போ முதிர்ச்சி பேட்டையில் 430 ஈரறை ஃபிளக்ஸி மற்றும் நான்கறை வீடுகளை, வாங்குவோர் எதிர்பார்க்கலாம். அதேநேரம் 3,000 வீடுகளில் சில சுவா சூ காங், ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட் மற்றும் தெங்கா போன்ற முதிர்ச்சியற்ற வட்டாரங்களில் இடம்பெறும். இந்தத் திட்டங்கள் இன்னும் மறுஆய்வில் இருப்பதால் விரைவில் அதிக விவரங்கள் அறிவிக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இன்று தெரிவித்தது. தேவைகளைச் சமாளிக்கும் விதமாக அதிகமான புதிய வீடுகளை முதிச்சிப் பேட்டைகளில் கட்டவேண்டிய அவசியம் இருப்பதாக இதற்கு முன்னர் கழகம் கூறியிருந்தது.
இந்நிலையில், பொதுவாகவே முதிர்ச்சி வட்டார வீடுகள் மிகவும் பிரபலம் என்பதால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் பலருக்கும் அப்பகுதிகளில் வீடுகளைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் கிட்டும் என்று ப்ராப்நெக்ஸ் சொத்து நிறுவன தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர் கூறினார்

