சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி உள்ளூரில் 61 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 33 பேர் இதற்கு முன்னர் நோய் தொற்றியோருடனும் தனிமை உத்தரவில் இருந்தோரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதர 17 பேருக்கும் இதுபோல் எந்தத் தொடர்பு இல்லாத நிலையில் நோய் தொற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நேற்று அறிவிக்கப்பட்ட 61 பேரில் 70 வயதைக் கடந்த மூவர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நோய் தொற்றும் அபாயம் இவர்
களுக்கு அதிகம் என்று அமைச்சு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த இருவருக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக நேற்று அறிவிக்கப்பட்ட 63 சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,951க்கு அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து ஐந்து நாட்களாக குறைந்து வந்த உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று சற்று அதிகரித்தன. உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 53 என அறிவிக்கப்பட்டிருந்தது.

