அடுத்த ஆண்டுக்கான பள்ளிக்கூட நடவடிக்கைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் எல்லா தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் 2022 ஜனவரி 4ல் தொடங்கி 2022 நவம்பர் 18 வரை கல்வி ஆண்டு நடைபெறும் என அது கூறியுள்ளது.
இருப்பினும் இறுதி கல்விப் பருவம் 2022 அக்டோபர் 28ஆம் தேதியுடன் முடிவடையும்.
சாதாரண நிலை எழுத்துத் தேர்வுக்காகப் பள்ளிக்கூடங்கள் பயன்
படுத்தப்படும் என்பதால் இந்தத் தேதி இறுதி செய்யப்பட்டதாக அமைச்சு நேற்று அதன் அறிக்கையில் கூறியது.
தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லேனியம் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு 2022 பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி அந்த ஆண்டு நவம்பர் 25 வரை நீடிக்கும்.
அதேநேரம் மில்லேனியம் கல்வி நிறுவனத்தின் இரண்டாமாண்டு மாணவர்கள் சற்று முன்னதாக, ஜனவரி 10ஆம் தேதி கல்வி ஆண்டைத் தொடங்குவர். ஆயினும் கல்வி ஆண்டின் முடிவு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உள்ளதைப்போல நவம்பர் 25 ஆக இருக்கும் என்றது அமைச்சு.
தொடக்கக் கல்லூரி இரண்டாம் ஆண்டு, மில்லேனியம் கல்வி நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு ஜனவரி 10ல் தொடங்கி 'ஏ' நிலை தேர்வுடன் முடிவடையும்.
பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை தேதிகளையும் அமைச்சு அறிவித்துள்ளது. தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான விடுமுறை: 12 மார்ச் முதல் 20 மார்ச் வரை; 28 மே முதல் 26 ஜூன் வரை; 3 செப்டம்பர் முதல் 11 செப்டம்பர் வரை; 19 நவம்பர் முதல் 31 டிசம்பர் வரை.
தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லேனியம் கல்வி நிறுவன மாணவர்களுக்கான விடுமுறை கிட்டத்தட்ட இதேபோல இருக்கும் என்றபோதிலும் ஆண்டிறுதி விடுமுறை மட்டும் 26 நவம்பரில் தொடங்கும்.
அதேநேரம் தொடக்கக் கல்லூரி, மில்லனிய நிறுவன இறுதி ஆண்டு மாணவர்களுக்கான விடுமுறை 'ஏ' நிலை தேர்வுக்குப் பின் தொடங்கும்.

