சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை ஆறு முதல் ஏழு விழுக்காடாக உயர்த்தியுள்ளது. எதிர்பார்த்ததைவிட ஆண்டின் முதல் பாதியில் கூடுதல் பொருளியல் வளர்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் முக்கிய நாடுகளிலும் உள்ளூரிலும் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் விகிதம் துரிதமாக அதிகரித்து வருவதும் இம்முன்னுரைப்புக்குக் காரணமாகும்.
இதற்குமுன் அதிகாரபூர்வ வளர்ச்சி முன்னுரைப்பு நான்கு முதல் ஆறு விழுக்காடாக இருந்தது. முதலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவ்வாறு முன்னுரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவ்வாண்டு மே மாதத்திலும் இதே முன்னுரைப்பு வெளியிடப்பட்டது.
எளிதில் அதிகளவாக தொற்றும் ஆற்றல் கொண்ட டெல்டா உருமாறிய கிருமியால் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து உலகளவில் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போடும் விகிதம் துரிதமாக நடந்து வருவதாலும் பொருளியலை மீண்டும் திறப்பதில் அந்நாடுகள் கவனம் செலுத்த முடிகிறது. இந்நிலையில், வர்த்தக, தொழில் அமைச்சு தனது முன்னுரைப்பை அறிவித்துள்ளது.
இதற்கு மாறாக, வட்டார நாடுகளில் சில, தங்கள் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை மெதுவாகவே நடத்தி வருகின்றன. மேலும், தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால், நாடுகள் மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் சூழலும் எழுகிறது. இதனால் அந்நாடுகளின் வளர்ச்சி முன்னுரைப்பும் குறைந்துவிடுகிறது என்றது அமைச்சு.
இதற்கிடையே, எதிர்பார்த்ததைவிட இரண்டாம் காலாண்டில் அதிகமாகப் பதிவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பும் அதன் 2021ஆம் ஆண்டுக்கான வர்த்தக முன்னுரைப்பை உயர்த்தி உள்ளது.
இதன்படி எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஏழு முதல் எட்டு விழுக்காடு வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய முன்னுரைப்பில் ஒன்று முதல் மூன்று விழுக்காடாக மட்டுமே அது இருந்தது. அதேபோல், மொத்த விற்பனைப்பொருள் வர்த்தகம் 13 முதல் 14% வளர்ச்சி அடையும் என்று முன்னுரைக்கப்படுகிறது. இதற்குமுன் அது ஐந்து முதல் ஏழு விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டது.
பயனீட்டாளரை மையமாகக் கொண்ட பிரிவுகள் மீண்டுவருவது முக்கியம். அத்துடன் வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் பிரிவுகள் எதிர்நோக்கும் ஊழியர் தட்டுப்பாட்டைத் தணிக்கவும் வேண்டியுள்ளது. இந்நிலையில், உள்ளூரிலும் எல்லைகளிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படுவதும் சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் விகிதம் அதிகரிப்பதும் கைகொடுக்கும் என்று அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு கேப்ரியல் லிம் தெரிவித்தார். இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் கருதி பயணத்துறை மற்றும் விமானத்துறை தொடர்பான பிரிவுகளில் மீட்சி சீரற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உற்பத்தி, மொத்த விற்பனை போன்ற பிரிவுகளில் பெரும்பான்மை வளர்ச்சி பதிவாகும் என்றும் திரு லிம் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, வேலையின்மை விகிதம் இவ்வாண்டின் எஞ்சிய பகுதியில் மேம்படும் சாத்தியம் உள்ளதாக மனிதவள அமைச்சின் இயக்குநர் திரு கென்னி டான் கூறியுள்ளார். முன்னதாக, இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைத் தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் உயர்த்தி இருந்தனர். 6.3% முதல் 7.5% வரை அவர்களின் முன்னுரைப்பு அமைந்ததற்கிடையே அமைச்சின் முன்னுரைப்பு அதையே எதிரொலித்து வந்துள்ளது.

