சிங்கப்பூர் இவ்வாண்டு மூன்றாவது முறையாக அதன் வர்த்தக முன்னுரைப்பை உயர்த்தியுள்ளது. இதற்கு மின்னணுப் பொருட்கள், எரிபொருள் சார்ந்த ரசாயனப் பிரிவுகளில் இரண்டாம் காலாண்டில் பதிவான அதிகளவு வளர்ச்சியே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 2021ல் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி, ஏழு முதல் எட்டு விழுக்காடு வளர்ச்சி காணும் என்று 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' நேற்று அறிவித்தது. இதற்குமுன் மே மாதத்தில் அமைப்பின் முன்னுரைப்பு, ஒன்று முதல் மூன்று விழுக்காடு வளர்ச்சி என்ற நிலையில் இருந்தது. இதற்கிடையே, எண்ணெய் விலைகளும் தொடர்ந்து அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால் மொத்த விற்பனை வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்படுகிறது.
இரண்டாம் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரை, எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 10.1 விழுக்காடு அதிகமாக பதிவாகியது. அதற்குமுன் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் இது 9.7 விழுக்காடாக இருந்தது.
மின்னணு அல்லாத பொருட்களால் ஏற்றுமதியில் 8.5% அதிகரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இருப்பினும், எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதியின் கால் பங்கைக் கொண்டுள்ள மின்னணுவியல் பிரிவு, ஐந்தாவது காலாண்டாக வளர்ச்சி கண்டு வந்துள்ளது.
மொத்த விற்பனைப் பொருள் வர்த்தகமும் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதியும் மே மாதம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வளர்ச்சி கண்டுள்ளதாக இஎஸ்ஜி குறிப்பிட்டது.
இதற்கிடையே, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முன்னுரைப்பை ஆறு முதல் ஏழு விழுக்காடாக நேற்று வர்த்தக, தொழில் அமைச்சு உயர்த்தியது.

