கட்டடம், நிலம், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் திட்டம் தொடர்பான உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அசையா சொத்துகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு இரண்டாம் காலாண்டில் $3.6 பில்லியனாக உயர்ந்திருந்தது.
முதல் காலாண்டு முதலீடுகளின் மதிப்பு $2.8 பில்லியனாக இருக்க அது ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 28.6 விழுக்காடு அதிகரித்திருப்பதாக நேற்று வெளியிடப்பட்ட வர்த்தக, தொழில் அமைச்சின் பொருளியல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
'எஃப்ஏஐ' எனப்படும் அசையா சொத்து முதலீடுகளில், $2.5 பில்லியன் மதிப்புடன் உற்பத்தித் துறையே பெரும்பான்மை முதலீட்டைப் பெற்றிருந்தது.
உற்பத்தித் துறைக்குள் அடங்கும் மின்னணுவியல் பிரிவு மட்டும் $1.3 பில்லியன் முதலீட்டையும் உயிர்மருத்துவ உற்பத்திப் பிரிவு $603 மில்லியன் முதலீட்டையும் பெற்றிருந்தன.
சேவைத் துறையில் $594 மில்லியன் முதலீட்டைப் பெற்றிருந்தது ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவு.
இரண்டாம் காலாண்டுப் பகுதியில் ஆக அதிகமான முதலீட்டு மதிப்புடன் மொத்த 'எஃப்ஏஐ'யில் 59% அதாவது $2.1 பில்லியன் பங்களித்தோர் அமெரிக்க முதலீட்டாளர்களே என்று கூறப்பட்டது.
இருப்பினும் மொத்த வர்த்தகச் செலவினத்தின் முதலீட்டு மதிப்பு, முதல் காலாண்டின் $1.9 பில்லியனிலிருந்து இரண்டாம் காலாண்டில் $1.4 பில்லியனாகச் சரிந்தது.

