சொத்துச் சந்தை நிறுவனமான 'புரோப்நெக்ஸ்', 2021ன் இரண்டாம் காலாண்டில் $16.5 மில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டமான மே முதல் ஜூன் வரை பதிவான அதன் $7.3 மில்லியன் லாபத்தைக் காட்டிலும் இவ்வாண்டு இரு மடங்குக்கு மேல் இந்த நிறுவனம் ஈட்டிஉள்ளது. இவ்வாண்டின் முதல் பாதியில் நிறுவனம் $31.3 மில்லியன் லாபம் ஈட்டியது. கடந்த ஆண்டின் முதல் பாதி லாபம் $14.8 மி.
இந்நிலையில், நிறுவனம் அதன் முதலீட்டு பங்குகளுக்குத் தலா 5.5 காசை இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. நிறுவனம் தொடங்கியதுமுதல், இதுவே ஆக அதிகம் என்றும் இந்த ஈவுத்தொகை அடுத்த மாதம் 3ஆம் தேதியன்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. கொவிட்-19 சூழலும் பொருளியலும் மேம்பட்டு, இரண்டாம் காலாண்டில் மேலும் அதிகமான பரிவர்த்தனைகள் இருந்ததால் வலுவான வளர்ச்சி கண்டதாக நிறுவனம் தெரிவித்தது.

