பொருளியல் ஒருங்கிணைப்பு: இந்தியாவுக்கு வலியுறுத்து

பொருளியல் ஒருங்கிணைப்பு: இந்தியாவுக்கு வலியுறுத்து

2 mins read
20fc966a-b152-448d-91c6-c5453ce130de
சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரம். கோப்புப்படம் -

தென்­கி­ழக்­கா­சி­யா­வு­ட­னான பொரு­ளி­யல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து இந்­தியா ஆலோ­சிக்­க­வேண்­டும் எனத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தினார். தென்­கி­ழக்­கா­சியா, இந்­தியா ஆகிய இரண்டு வட்­டா­ரங்­க­ளி­டம் ஒன்­றுக்­கொன்று கைகொ­டுக்க வகை­செய்­யும் அம்­சங்­கள் இருக்கின்­றன.

அவற்றை நன்கு உப­யோ­கித்து, கிரு­மிப் பர­வ­லுக்குப் பிந்­தைய காலத்­தைக் கருத்­தில்­கொண்டு, வட்­டா­ரங்­க­ளுக்கு இடையி­லான தொடர்பை மீட்டு விநியோகச் சங்­கி­லியை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளு­மாறு திரு ஹெங் கேட்­டுக்­கொண்­டார்.

"உல­க­ள­வில் விநி­யோ­கச் சங்கிலி­யைப் பல்­வ­கைப்­ப­டுத்தி அதை மேலும் திட­மாக்­கு­வ­தில் இந்­தி­யா­விற்கு முக்­கி­யப் பங்­குண்டு," என்றார் அவர்.

"உள்­ளூர் சந்­தை­யை­யும் தாண்­டிப் பங்­காற்­றுவதற்கான ஆற்­ற­லும் வளங்­களும் இந்­திய நிறு­வ­னங்­களிடம் உள்­ளன, அந்­தச் சந்தை பெரி­தாக இருப்­பது இதற்­குக் காரணம்," எனத் திரு ஹெங் சுட்டினார். சிஐஐ என்­ற­ழைக்­கப்­படும் இந்தியத் தொழிற்­துறை சம்­மேளனம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் அமைச்­சர் பேசி­னார். இம்முறை மெய்­நி­கர் வவாயிலாகக் கூட்டம் நடை­பெற்­றது. ஆசியானும் இந்­தி­யா­வும் மின்­னி­லக்கத் தொடர்பை மேம்­ப­டுத்­து­வது முக்கியம் எனத் திரு ஹெங் குறிப்பிட்­டார். வட்­டார அள­வி­லான முழு­மை­யான பொருளியல் பங்காளித்­துவத்தில் இந்­தியா இன்­ன­மும் இடம்பெறலாம் என்­பதை அவர் வலி­யு­றுத்­தி­னார்.

வட்­டார அள­வி­லான முழு­மை­யான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம் சென்ற ஆண்டு நவம்­பர் மாதத்­தில் நடப்­புக்கு வந்­தது.

அதை கடந்த ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் மறுவுறுதிப்படுத்தியது.

2019ஆம் ஆண்டில் இந்தியா அதிலிருந்து விலகிக்கொண்டது.

உல­கின் ஆகப் பெரிய வர்த்­தக ஒப்­பந்­த­மான இந்த பங்­கா­ளித்­துவ உடன்பாட்டில் அனைத்து ஆசி­யான் உறுப்பு நாடு­க­ளு­டன் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்­பான், நியூ­சி­லாந்து, தென்­கொ­ரியா ஆகி­ய­வை­யும் இடம்­பெற்றுள்­ளன.

இரு தரப்­பின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல்­களை மேலும் சிறப்­பாக ஒருங்­கி­ணைக்க சிங்­கப்­பூர் இந்­தி­யா­வு­டன் சேர்ந்து பணி­யாற்ற ஆவ­லாக இருப்­ப­தா­கப் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங் கூறி­னார்.