சட்டவிரோத குதிரைப் பந்தயம்: 16 சந்தேக நபர்கள் மீது விசாரணை
சட்டவிரோதமான குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16 பேர் மீது காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அங் மோ கியோ பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் சிராங்கூன் அவென்யூ மூன்றில் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இம்மாதம் நான்காம் தேதிக்கும் எட்டாம் தேதிக்கும் இடையே நடத்தப்பட்ட சோதனைகளில் 18,200 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம், ஐந்து கைபேசிகள், குதிரைப் பந்தயம் தொடர்பிலான பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான அனைவரும் 68லிருந்து 80 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் நால்வர் 'புக்மேக்கர்ஸ்' எனப்படும் பந்தயம் பிடிப்பவர்களாகச் செயல்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மற்றவர்கள் அத்தகையோரிடம் பந்தயம் கட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்களிலிருந்து ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 5,000லிருந்து 200,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
உடற்பிடிப்பு, கேளிக்கை கூடச் சோதனை: 88 பேர் மீது விசாரணை
92 உடற்பிடிப்புக் கூடங்களிலும் 23 கேளிக்கை கூடங்களிலும் காவல்துறையினர் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து 88 பேர் மீவிசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
உபி அவென்யூ 3, காக்கி புக்கிட் ரோடு 1, லோரோங் 8 தோபாயோ, டெஸ்கர் ரோடு ஆகிய பகுதிகளில் உரிமம் இல்லாமல் கேடிவி பாணியில் இயங்கிவந்த நான்கு கூடங்களும் சோதனையிடப்பட்ட இடங்களில் அடங்கும். அவற்றை 10 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நான்கு கூடங்களுக்கும் 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் 300 வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
24 உடற்பிடிப்புக் கூடங்கள், கொவிட்-19 கட்டுப்பாடுகள், உடற்பிடிப்புக் கூடச் சட்டம் ஆகியவற்றை மீறியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்களிலிருந்து ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் 10,000லிருந்து 20,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
23வது மாடியிலிருந்து விழுந்த தீயணைப்புக் கருவி
பீச் ரோட்டில் உள்ள 'ஸ்கைஸ்கிரேப்பர்' எனப்படும் உயர் கட்டடம் ஒன்றின் 23வது மாடியிலிருந்து கண்ணாடி சன்னலை உடைத்துக்கொண்டு தீயணைப்புக் கருவி ஒன்று கீழே விழுந்தது.
கேட்வே வெஸ்ட் கட்டடத்திலிருந்து விழுந்த அந்தத் தீயணைப்புக் கருவி காலாவதியானதாக நம்பப்படுகிறது.
சம்பவம் நேற்று முன்தினம் காலை சுமார் 10.30 மணிக்கு நிகழ்ந்ததாகக் கட்டடத்தை நிர்வகிக்கும் சிங்கப்பூர் நிலக் குழுமம் தெரிவித்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் குழுமம் குறிப்பிட்டது.
சம்பவம் தொடர்பிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தீயணைப்புக் கருவி கட்டடத்தில் இருந்த வாடகைதாரருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டது.

