மோசடிக்காரர்களின் பேச்சைக் கேட்டு அமெரிக்காவில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் 49,000க்கும் அதிகமான பங்குகளை வாங்கிய ஏழு பேர் $1.45 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்தனர்.
சிறப்பாக முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டக் கற்றுத் தருபவர்களாக நடித்து ஏமாற்றியவர்களின் ஆலோசனையைக் கேட்டதால் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பங்குகளை வாங்கிய பிறகு இரண்டு நாட்களில் அவற்றின் விலை சரிந்ததால் மோசடியில் சிக்கியவர்கள் அதிகமான தொகையை இழக்க நேரிட்டது.
இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது அரிதல்ல.
இதுபோன்ற மோசடிகளில் பொய்த் தகவல்கள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட பங்குச்சந்தை செய்தியைப் பகிர்ந்து மோசடிக்காரர்கள் நிறுவனங்களின் பங்கு விலையை உயர்த்துவர்.
ஏமாற்றப்பட்டவர்கள் பங்குகளை வாங்கியபின் மோசடிக்காரர்கள் அவற்றை விரைவில் விற்று லாபம் ஈட்டுவர்.
இதனால் பங்குகளின் விலை சரியும்.
ஏமாந்தவர்கள் அதிகப் பணத்தை இழக்க நேரிடும்.
பெரும்பாலான வேளைகளில் இத்தகைய மோசடிக்காரர்கள், வாட்ஸ்ஆப், வீச்சேட் போன்ற தளங்களின் வாயிலாக மக்களுக்கு அறிமுகமாவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
பொதுவாக ஹாங்காங் அல்லது அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் விற்கப்படும் பங்குகளை வாங்கச் சொல்லி மோசடிக்காரர்கள் மக்களை ஈர்ப்பர்.
மோசடிக்காரர்கள் பொதுவாக இரண்டு உத்திகளைக் கையாள்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
ஒன்று, கவர்ச்சியான பெண்களைப் போல் நடித்து மக்களை ஈர்த்து ஏமாற்றுவது.
மற்றொன்று, சிறப்பாக முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டக் கற்றுத் தருபவர்களாக நடித்து ஏமாற்றுவது.
பழக்கம் இல்லாதோர் பங்குச் சந்தை தொடர்பிலான ஆலோச னையை வழங்கும்போது கவனமாக இருக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
நிதி ஆலோசனை தேவைப்பட்டால் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஒழுங்குமுறை கண்காணிப்பின்கீழ் வரும் தனிநபர்கள் அல்லது குழுக்களை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

