சிங்கப்பூர் மருத்துவமனைகளில் உள்ள தீவிர கண்காணிப்புப் பிரிவில் இப்போது எட்டு கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். நாட்டில் கிருமித்தொற்று கூடும் பட்சத்தில் இத்தகைய சிகிச்சை தேவைப்படக் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். என்றாலும் அதைச் சமாளித்துவிடக்கூடிய அளவுக்கு ஆற்றல் இருக்கிறது என்று பேராசிரியர் டேல் ஃபிஷர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
தடுப்பூசி இயக்கம் வேகமடைந்து வருவதும் மருத்துவமனைகள் எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளும் இதற்கான காரணங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்த் துறை மூத்த ஆலோசகரான பேராசிரியர் ஃபிஷர், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை தேவைப்படக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
"அன்றாடம் எத்தனை பேருக்கு கடுமையான தொற்று ஏற்படுகிறது என்பதை நாங்கள் கண்காணிக்கிறோம். குணமடைவோரையும் கவனித்து வருகிறோம்.
"அன்றாடம் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதையும் நாங்கள் கவனித்து வருகிறோம்," என்று பேராசிரியர் தெரிவித்தார். தீவிர கண்காணிப்புப் பிரிவின் ஆற்றல்வளம் தேவையைவிட குறைந்துவிடக்கூடிய ஆபத்து அவ்வளவாக இல்லை என்றார் அவர்.
இதனிடையே, ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவரப்படி 70 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள ஏறத்தாழ 80,000 பேர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத, இலேசான நோய்கள் உள்ள முதியவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பல கணிப்புகளை மருத்துவமனைகள் செய்ய முடியும் என்று பேராசிரியர் ஃபிஷர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூர் மருத்துவமனைகளில் 508 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 35 பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டது. எட்டு பேர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
சிங்கப்பூரில் சென்ற மாதம் பெரிய தொற்றுக் குழுமங்கள் தலைதூக்கியதை அடுத்து அதிகமான கொவிட்-19 படுக்கைகளுக்குத் திட்டமிட மருத்துவமனைகள் முயற்சிகளை முடுக்கிவிட்டன.
தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடிய மிகப் பெரிய ஆபத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் என்று பேராசிரியர் ஃபிஷர் விளக்கினார்.

