குறைகூறல்கள், ஏச்சுபேச்சுகளை எல்லாம் ஊக்குவிப்பாக, உரமாகப் பயன்படுத்திக்கொள்ளும்படி ஒலிம்பிக் வீரர்களை அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தினார்.
தோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 23 வீரர்களில் 15 பேரை மெய்நிகர் வழியாக செவ்வாய்க்கிழமை அதிபர் சந்தித்தார்.
"ஒலிம்பிக் போட்டிகளில் முடிவு எப்படி இருந்தாலும் உங்களை நினைத்து நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். உங்களை நினைத்து எங்களுக்கும் பெருமை.
"சமூக ஊடகம், செய்தி ஊடகம் எல்லாவற்றிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உங்கள் முயற்சி களை ஆதரித்து பாராட்டினர். பலரும் உங்களால் ஊக்கமடைந்தனர்.
"பொதுத் தளங்களில் பலதரப்பட்ட கருத்துகளும் இடம்பெறும். அவற்றின் ஒரு பகுதியாக சிலர் உங்களின் ஆற்றல், அர்ப்பணிப்பு உணர்வு பற்றி கேள்வி எழுப்பினர். ஒரு சிலர் ஏச்சுபேச்சுகளை வெளிப் படுத்தினர்.
"இவர்கள் கூறுவதை எல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டாம். உன்னதத்தைச் சாதிக்க வேண்டும் என்ற உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வை யாரும் தட்டிப் பறித்துவிட முடியாது. குறைகூறல்களை எல்லாம் அலட்சியப்படுத்தி விடுங்கள். அவற்றை உங்களின் அடுத்த குறிக்கோளுக்கு உரமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்," என்று அதிபர் தெரிவித்தார்.
தோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் வீரர்கள் சாதனை அளவாக 12 வகை விளையாட்டுகளில் பங்கெடுத்தனர். 2008க்கு பிறகு அவர்கள் இந்த ஒலிம்பிக்கில்தான் ஒரு பதக்கத்தைக்கூட பெறவில்லை.
இதை இணையத்தில் சிலர் குறை கூறினர். இதையடுத்து விளையாட்டு வீரர்களைத் தற்காத்து அவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளும்படி சிங்கப்பூரர்களை ஃபேஸ்புக்கில் அதிபர் அண்மையில் கேட்டுக்கொண்டார்.

