செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f38b2174-72d1-4dff-a895-e753c2b1c8ee
-

கொவிட்-19: தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் மரணம்

கொவிட்-19 கிருமி தொற்றிய 69 வயது சிங்கப்பூர் ஆடவர் புதன்கிழமை மரணமடைந்தார். அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவருக்கு ஜூலை 28ஆம் தேதி உடலில் பல அறிகுறிகள் தெரியவந்தன.

அடுத்த நாள் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது அங்கு உறுதியானதாக சுகாதார அமைச்சு புதன்கிழமை பின்நேரத்தில் அறிவித்தது.

அந்த ஆடவர் ஏற்கெனவே பக்கவாதம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிகளவு கொழுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்துவந்தார். மாண்டுவிட்ட அந்த ஆட வரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்குப் பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 43 ஆகியது.

அமைச்சு, புதிய மூன்று தொற்றுக் குழுமம் பற்றியும் புதன்கிழமை அறிவித்தது. கிரேத்தா ஆயர் சமூக மன்றத்தில் உள்ள சூப்பர்லேண்ட் பாலர்பள்ளி தொற்றுக் குழுமம் அவற்றில் ஒன்று. அதில் நால்வர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மற்ற இரு குழுமங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டனர்.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு தகவல்

வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இங்கு குறிப்பிட்ட மருந்தகங்களுக்குச் சென்று தங்கள் சான்றிதழ்களைச் சரிபார்த்து அவற்றை சிங்கப்பூரில் பயன்படுத்தலாமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

சுகாதார அமைச்சு தனது இணையத்தளத்தில் பட்டியலிட்டுள்ள மருந்தகத்திற்குச் சென்று சரிபார்ப்பு நடைமுறையை அவர்கள் தொடங்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஃபேஸ்புக்கில் கூறினார்.

கொவிட்-19 கிருமியை எதிர்க்கும் ஆற்றல் உடலில் இருப்பதைக் காட்டும் பரிசோதனைக்கு அவர்கள் உட்பட வேண்டும். உடலில் கிருமி எதிர்ப்பு ஆற்றல் இருப்பது தெரியவந்தால் பரிசோதனை விவரங்கள் எல்லாம் ஒருவரின் ஹெல்த்ஹப் மற்றும் டிரேஸ்டுகெதர் செயலியில் பதிவேற்றப்படும்.

ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி அல்லது மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் விவரங்கள், அவை தேசிய நோய்த் தடுப்பாற்றல் பதிவகத்திற்கு அனுப்பப்பட்ட பிறகு, ஏறக்குறைய இரண்டு நாட்களில் பதிவேற்றப்படும். உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்து உள்ள இதர தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ள வர்களின் விவரங்கள் இப்போதைக்கு ஹெல்த்ஹப் செயலியில் மட்டும் இடம்பெறும்.

மற்றவர்களின் தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்தாதீர்

உணவகங்களில் சாப்பிட வேண்டும் என்பதற்காக யாரும் மற்றவரின் கொவிட்-19 தடுப்பூசி சான்றிதழைப் பயன் படுத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் எச்சரித்துள்ளார். இத்தகைய காரியங்களில் சிலர் ஈடுபடு வது அதிகாரிகளுக்குத் தெரியும் என்றார் அமைச்சர்.

இந்தத் தகாத செயலுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குற்றவாளி களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

விருந்தில் அல்லது ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டும் எனில் நிகழ்ச்சிக்கு முந்தைய கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார். இந்தப் பரிசோதனைக்குக் கட்டணம் $20. இது 24 மணி நேரம் செல்லும். சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளாதவர்கள் உணவகத்தில் அல்லது உணவு நிலையத்தில் சாப்பிட வேண்டுமானால் முன் பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்பது தேவையானதாகும்.

கடந்த 270 நாட்களில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்து இருப்போர், உணவு, பான நிலையத்தில் சாப்பிட வேண்டுமானால், முன் பரிசோதனையில் இருந்து விதிவிலக்கு அளிக்கும் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.